தேசிய மின் பண பரிவர்த்தனை மற்றும் வங்கி ஒருங்கிணைப்பு கோர் பேங்கிங் மூலம், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஆணையம் , தனது பயனாளிகளுக்கு இ - பேமெண்ட் முறையில் பணம் வழங்கும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் இரண்டொரு நாட்களில் வங்கி கணக்குகளில் பயனாளிகள் பணம் பெறலாம். இது குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது, இந்த திட்டத்திற்கு பயனாளிகள் தங்களது வங்கி கணக்கு புத்தக்தின் முதல் பக்க நகலில், கையெழுத்துடன் சுய உறுதி அளிக்க வேண்டும் அல்லது க்ளைம் மனுவுடன் ஒருப்பிழப்பு செய்யப்பட்ட காசோலையின் நகலையும் வழங்கலாம். இதனால் பணம் உடனடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.மேலும் உறுப்பினர்கள் தங்களது மொபைல் போன் நம்பரையும் தெரிவிக்கவேண்டும். இதனால் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கும் தகவல்களை பெற முடியும் என தெரிவித்துள்ளனர்.
Friday, July 30, 2010
மாற்றுத் திறனாளிகள் திருமண தம்பதியருக்கு 25ஆயிரம் நிதியுதவி
மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண உதவித் தொகையை 20 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி, முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். வருமான உச்ச வரம்பும் நீக்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகளை திருமணம் செய்யும் இயல்பான நிலையில் உள்ளவர்களை ஊக்குவிக்க, திருமண நிதியுதவித் திட்டம் 1986ல் துவக்கப்பட்டது. ஒரு மாற்றுத் திறனாளியை மற்றொரு மாற்றுத் திறனாளி திருமணம் செய்து கொண்டாலும் அவர்களுக்கு திருமண உதவித் தொகை வழங்கும் திட்டம், கடந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகையை, 20 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்த உள்ளதாக, முதல்வர் கருணாநிதி சட்டசபையில் அறிவித்திருந்தார். அதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளின் நலன் கருதி, வருமான உச்ச வரம்புத் திட்டத்தின் கீழ் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உதவித் தொகை, திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், 12 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கமாகவும், மீதத் தொகை தேசிய சான்றிதழ் பத்திரமாகவும் வழங்கப்படும். இத்திட்டத்துக்காக ஒரு கோடியே 22 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை ஒதுக்கி, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
பேஸ்புக் கொஸ்டீன்ஸ்
ஒருவர் கேள்வி கேட்க, அதற்கு பலர் பதிலளிக்கும் வகையில் அமையப்பெற்ற புதிய பகுதியை சோதனை முறையில் பேஸ்புக் இணையதளம் துவக்கியுள்ளது. ஆரம்பித்த சிறிது காலத்திலேயே அசுர வளர்ச்சி் பெற்றுள்ள சோஷியல் நெட்வொர்க்கிங் இணையதளமான பேஸ்புக் இணையதளம், புதிய பகுதி ஒன்றை சோதனை முறையில் துவக்கியுள்ளது. பேஸ்புக் கொஸ்டீன்ஸ் என்ற முறையில் துவக்கப்பட்டுள்ள இந்த புதிய பகுதிக்கு 'டேப் இன்டூ தே கலெக்டிவ் நாலெட்ஜ்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த பேஸ்புக் இணையதள புராடக்ட் மேனேஜ்மெண்டிற்கான இயக்குனர் பிளேக் ராஸ் கூறுகையில், இதன்மூலம், ஒரு கேள்விக்கு, பலவிதமான பதிலை பேஸ்புக் பயனாளர்கள் பெற முடியும் என்றும், தற்போது, இந்த சேவை சோதனைமுறையில் அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், விரைவில் இது விரிவாக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
டிஎன்பிஎல் நிறுவனத்தின் நிகரலாபம் உயர்வு
தமிழ்நாடு செய்தித்தாள்நிறுவனத்தின் லாபம் நான்கு மடங்கு உயர்ந்துள்ளது.தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் கடந்த ஜூன் மாதத்துடன் முடிந்த முதல் காலாண்டில் 290.11 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது.கடந்த ஆண்டு இதே காலாண்டின் வருமானம் 178.79 கோடி ரூபாய். இந்த காலாண்டில் வரிக்கு முன்லாபம் 55.18 கோடி ரூபாய்.கடந்த ஆண்டு முதல் காலாண்டின் வரிக்கு முன்லாபம் 10.88 கோடி ரூபாய்.இந்த காலாண்டில் வரிக்கு பின் லாபம் 39.87 கோடி ரூபாய். கடந்த ஆண்டு முதல் காலாண்டின் லாபம் 7.14 கோடி. எனவே,கடந்த ஆண்டு முதல் காலாண்டின் லாபத்தை விட 4.58 மடங்கு லாபம் உயர்ந்துள்ளது.இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்நிறுவனம் 64 ஆயிரத்து 537 டன் காகிதம் உற்பத்தி செய்துள்ளது.நடப்பு ஆண்டில், இந்நிறுவனம் மூன்று புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்த உள்ளதாக, செய்தித்தாள் காகித நிறுவனத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் மோட்டார்ஸ் யுனைடெட் வங்கியுடன் கைகோர்ப்பு
இந்தியாவில் கார்களின் விற்பனையை அதிகரிக்க, இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான யுனைடெட் பாங்க் ஆப் இந்தியாவுடன் கைகோர்க்க ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதுகுறித்து ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : தங்கள் நிறுவன கார்களை வாங்குவதற்கான நிதியுதவி வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தங்கள் இந்நிறுவனமும், யுனைடெட் பாங்க் ஆப் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளதாகவும், இதனையடுத்து தகுதியுள்ள வாடிக்கையாளர்களுக்கு, இனி யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா கார் வாங்குவற்தகாக நிதியுதவி வழங்கும், இதன்மூலம் தங்கள் நிறுவன கார்கள் இந்தியாவில் பலதரப்பு மக்களை விரைவில் சென்றடையும் என்பதில் யாதொரு மாற்றுக் கருத்துமில்லை என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thursday, July 29, 2010
வர்த்தகம்
இன்று பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது.
காலை 9.04 மணியளவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 14.40 புள்ளிகள் குறைந்து 17942.97 ஆக வர்த்தகமாகியிருந்தது .
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 5.00 புள்ளிகள் குறைந்து 5392.55 ஆக வர்த்தகமாகியிருந்தது.
காலை 9.04 மணியளவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 14.40 புள்ளிகள் குறைந்து 17942.97 ஆக வர்த்தகமாகியிருந்தது .
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 5.00 புள்ளிகள் குறைந்து 5392.55 ஆக வர்த்தகமாகியிருந்தது.
நிதிச்சுமையில் சிக்கி தவிக்கும் 'தங்கரத' ரயில்
தென்னிந்திய சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட தங்கரத சொகுசு ரயில் நிதிச்சுமையில் சிக்கியுள்ளதால், தொடர்ந்து இயக்கப்படுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. தென்னிந்திய சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில், 2007ம் ஆண்டு தங்கரத சொகுசு ரயில் (கோல்டன் சேரியாட்) அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ரயிலில் ஆடம்பர வசதிகளுடன் கூடிய 11 பெட்டிகள் இணைக்கப்பட்டன. இவற்றில் 44 தனித்தனி அறைகள் உள்ளன. இதில் 82 பயணிகள் பயணம் செய்யலாம். இதில் பயணம் செய்ய ஒரு நாள் கட்டணமாக லட்சத்தில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது தொடர்பாக தங்கரத ரயில் திட்ட இயக்குனர் சீனிவாஸ் கூறியதாவது: பல்வேறு காரணங்களால் தங்கரத ரயிலை தொடர்ந்து இயக்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. தங்கரத ரயிலில் பயணம் செய்ய கட்டணம் அதிகமென்பதால் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லை. மேலும் உலக பொருளாதார சரிவு எதிரொலியால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. இதனால் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. இந்த ரயில் ஏற்கனவே இரண்டு முறை மட்டுமே முழு கொள்ளவுடன் பயணம் செய்துள்ளது. ஏற்கனவே தங்கரத ரயில் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்த ரயிலை ஒரு தடவை இயக்குவதற்கு 18.5 லட்ச ரூபாயை ரயில்வே துறை கட்டணமாக வசூலித்து வந்தது. இந்நிலையில் கட்டணத்தை ரயில்வே துறை திடீரென 40 லட்ச ரூபாயாக உயர்த்தி விட்டது. ஏற்கனவே போதிய வருவாய் இல்லாமல் நஷ்டத்தில் இயங்கி வரும் வேளையில் ரயில்வே துறை கட்டணத்தை உயர்த்தியுள்ளது மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தங்கரத ரயிலை தொடர்ந்து இயக்கும் வகையில் ரயில்வே துறை கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள், முதலமைச்சர் மற்றும் மாநில சுற்றுலா துறை அமைச்சர் ஆகியோரை வலியுறுத்தியுள்ளனர். இந்த பிரச்னைக்கு விரைவில் நல்ல தீர்வு கிடைக்குமென நம்புகிறோம். மேலும் கட்டணத்தை குறைக்கவும், பயண கட்டணத்தை நிர்ணயிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளோம். 2009ம் ஆண்டில் உலக பொருளாதார சரிவு மற்றும் பன்றிக்காய்ச்சல் போன்ற காரணங்களால் தங்கரத ரயில் பெரும் நஷ்டத்தை எதிர் கொண்டது. மேலும் கட்டணத்தை ரயில்வே துறை உயர்த்தியதும், இத்திட்டத்தில் நஷ்டம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. இவ்வாறு சீனிவாஸ் கூறினார்.
சரிவில் தங்கம்
தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 அதிகரித்தது.
சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1662 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.17870 ஆகவும் இருந்தது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.31.00 க்கும், பார் வெள்ளி ரூ.28945 க்கும் விற்பனை செய்யப்பட்டது.
"ரெயின்ட்ரீ" ரூ.200 கோடியில் புதிய ஹோட்டல்
சென்னையைச் சேர்ந்த சீப்ராஸ் குழுமம், ரியல் எஸ்டேட் மற்றும் ஹோட்டல் துறையில் ஈடுபட்டு வருகிறது. 1970-ஆம் ஆண்டு முதல் பல்வேறு திட்டப் பணிகளை மேற்கொண்டு வரும் இந்நிறுவனம், அண்ணாசாலையில், நந்தனத்தில் ரெயின்ட்ரீ என்ற அதன் இரண்டாவது ஹோட்டலை தொடங்கி உள்ளது. இந்நிறுவனத்தின் முதல் ரெயின்ட்ரீ ஹோட்டல் சென்னை செயின்ட் மேரீஸ் சாலையில் அமைந்துள்ளது. இது குறித்து இக்குழுமத்தின் நிர்வாக இயக்குனர் சி.சுப்பாரெட்டி கூறும்போது, 'புதிதாக தொடங்கப்பட்டுள்ள ரெயின்ட்ரீ ஹோட்டல் ரூ.200 கோடி செலவில் (நிலம் வாங்கியது உள்பட) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டலில் 230 அறைகள் உள்ளன. இது தவிர, சென்னை விமான நிலையத்திற்கு அருகாமையில், ரூ.200 கோடி திட்டச் செலவில், 200 அறைகளுடன் கூடிய மற்றொரு ஹோட்டலையும் உருவாக்கி வருகிறது. இந்த ஹோட்டல் திட்டத்திற்கு உள்ளாட்சி அமைப்புகள் அனுமதி வழங்கி உள்ளன. டெல்லியில் உள்ள பாதுகாப்பு இயக்குனரகத்தின் ஒப்புதல் நிலுவையில் உள்ளது'' என்று தெரிவித்தார். சீபிராஸ் குழுமம், கடந்த 27 ஆண்டுகளில், 170 ரியல் எஸ்டேட் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும், 4.50 லட்சம் சதுர அடியில் திட்டப் பணிகள் கைவசம் உள்ளன. டைடல் பார்க் அருகாமையில் 3.50 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வரும் 350 குடியிருப்புகள் திட்டம் ஓராண்டிற்குள் நிறைவடையும் என இக்குழுமம் தெரிவித்துள்ளது. இக்குழுமத்திற்கு சென்னை ஒரகடத்தில் 60 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு ஒரு நகரியத்தையும், வில்லா வகை குடியிருப்புகளையும் அமைக்க திட்டமிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் தேசிய நெடுஞ்சாலையில், 40 ஏக்கரில் வர்த்த குடியிருப்பு திட்டம் ஒன்றையும் மேற்கொள்ள இருப்பதாக சுப்பாரெட்டி தெரிவித்தார். இக்குழுமத்தில் தற்போது 2,900 பேர் பணிபுரிகின்றனர். ரியல் எஸ்டேட் நடவடிக்கைகளின் வாயிலாக நடப்பு நிதி ஆண்டில், குழுமம் ரூ.350 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கிறது. இது, சென்ற நிதி ஆண்டில், ரூ.250 கோடியாக இருந்தது. செயின்ட் மேரீஸ் சாலையில் அமைந்துள்ள ரெயின்ட்ரீ ஹோட்டலில் 105 அறைகள் உள்ளன. தற்பொழுது இவற்றில் 70 சதவீத அளவிற்கு வாடிக்கையாளர்கள் தங்கி வருகின்றனர். இந்த ஹோட்டல், சென்ற நிதி ஆண்டில் ரூ.35 கோடி வருவாய் ஈட்டி உள்ளது என அவர் மேலும் கூறினார்.
இன்டெல் சர்வர் கூலர் அறிமுகம்
இந்தியாவின் முன்னணி தகவல்தொழில்நுட்ப நிறுவனமான கிளாசியல்டெக் நிறுவனம், இன்டெல் சீரிஸ் சர்வர் கூலர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : தங்கள் நிறுவனம், 3 வகை சர்வர் கூலர்களை அறிமுகம் செய்துள்ளது எனவும், அவை முறையே, போலாரிஸ் 7010 ( 1யு ரேக்மவுண்ட் பேசிவ்), போலாரிஸ் 7110 (1யு ரேக்மவுண்ட் ஆக்டிவ்) மற்றும் போலாரிஸ் 7120 ( 2யு ரேக்மவுண்ட் ஆக்டிவ்), இந்த சர்வர் கூலர்கள் இன்டெல் எல்ஜிஏ771 சர்வர் சிபியூக்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சர்வர் கூலர்கள் சிஎப்டி மற்றும் ஸ்கைவ்ட் பின் அல்லது ஸ்டாக்ட் பின் தொழில்நுட்ப அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், போலாரிஸ் 7010, 680 கிராம் எடையுடனும், போலாரிஸ் 7120 746 கிராம் எடையுடனும், பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளதாக கிளாசியல்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
குற்றாலத்தில் கைவினை பொருட்கள் கண்காட்சி
குற்றாலத்தில் மாவட்ட மகளிர் திட்ட சுய உதவி குழுக்களின் கைவினை பொருட்கள் கண்காட்சியை கலெக்டர் ஜெயராமன் திறந்து வைத்தார். குற்றாலம் கிராம நிர்வாக அலுவலகத்தில் மாவட்ட மகளிர் சுயஉதவி குழுக்களின் கைவினை பொருட்கள் கண்காட்சி நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் ஜெயராமன் துவக்கி வைத்து கண்காட்சியில் இடம்பெற்றுள்ள பொருட்களை பார்வையிட்டார். மகளிர் திட்ட மாவட்ட திட்ட அலுவலர் முத்துமீனாள் முன்னிலை வகித்தார். முக்கிய பிரமுகர்கள் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் குற்றாலம் டவுன் பஞ்., தலைவர் ரேவதி, துணைத் தலைவர் ராமையா, நிர்வாக அதிகாரி ராஜையா, ஆர்டிஓ சேதுராமன், தாசில்தார் பரமசிவன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம பஞ்.,) ஆமீனாள் பீவி, செங்கோட்டை வார்டு உறுப்பினர் சுசீலா, உதவி திட்ட அலுவலர் ஆண்டனி எட்வர்ட்சிங் உட்பட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகள் குறைந்த விலையில் தரமான பொருட்களை வாங்கிடும் வகையில் ஆயத்த ஆடைகள், அலங்கார பொருட்கள், மூலிகை பொருட்கள், பத்தமடை பாய் வகைகள், ஊஞ்சல்கள், உணவு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், பரிசு பொருட்கள், மூங்கில் நாற்காலிகள் போன்ற பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. இந்த கண்காட்சியில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், திருச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தனர்.
வீடு,வாகன கடன் வட்டிகள் அதிகரிக்க வாய்ப்பு
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முகமாக குறைந்த கால கடன் வழங்கல் மற்றும் பெறுதல் மீதான வட்டி விகிதங்களை இந்திய மைய வங்கி உயர்த்தியிருப்பதன் காரணமாக வீடு, வாகன கடன்கள் மீதான வட்டி விகிதத்தை வங்கிகள் உயர்த்தும். குறைந்த கால கடன் வழங்கல் மீதான வட்டி விகிதத்தை 0.25 சதவீதமும், குறைந்த கால கடன் பெறுதல் மீதான வட்டி விகிதத்தை 0.5 விழுக்காடும் மைய வங்கி உயர்த்தியுள்ளது. இந்த உயர்வு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. இந்த உயர்வால் வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட கடன்னகளின் மீது வணிக வங்கிகள் வசூலித்துவரும் வட்டி விகதமும் அதிகரிக்கும்.
Wednesday, July 28, 2010
பங்கு வர்த்தக நிலவரம்
பங்கு சந்தையில் வர்த்தகம் ஏற்றத்தில் தொடங்கி சரிவில் முடிந்தது.
இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 120.24 புள்ளிகள் சரிந்து 17957.37 புள்ளிகளாக இருந்தது.
நிஃப்டி 33.05 புள்ளிகள் சரிந்து 5397.55 புள்ளிகளாக இருந்தது.
இன்றைய பங்கு வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், லாசன் அண்ட் டியூப்ரோ, என்டிபிசி, ஹச்யூஎல், ஐசிஐசிஐ ஆகியவற்றின் பங்குகள் அதிக அளவில் விற்கப்பட்டதால் இன்றை பங்கு சந்தை சரிவில் முடிந்தது.
பெட்ரோல் விலை உயர்வு ஏன்?
'பெட்ரோல் மற்றும் டீசல் விலை, மிகச் சிறிய அளவில் தான் உயர்த்தப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் நிதி நிலைமையை மேம்படுத்த அத்தகைய நடவடிக்கை தேவைப்படுகிறது' என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா விளக்கம் அளித்தார்.
நேற்று லோக்சபாவில், முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ் ஆகியோரும், அவர்களது கட்சி உறுப்பினர்களும் பெட்ரோல் விலை உயர்வு குறித்து கோஷம் எழுப்பினர். அவர்களுக்கு விளக்கம் அளித்த மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா கூறியதாவது:பெட்ரோல் மற்றும் டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் மீதான விலை உயர்வு என்பது மிகச் சிறிய அளவு தான். எண்ணெய் நிறுவனங்களின் நிதி நிலைமையை மேம்படுத்த இதுபோன்ற நடவடிக்கைகள் எடுப்பது அவசியமாகிறது.சில மாநிலங்கள் பெட்ரோல் மீதான விற்பனை வரியை அதிகபட்சமாக 33 சதவீதமாகவும், டீசல் மீது 24.7 சதவீதமாகவும், மண்ணெண்ணெய் மீது 12.5 சதவீதமாகவும் நிர்ணயித்துள்ளன. இவ்வாறு அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார்.
140 அமெரிக்கா வங்கிகள் திவால்
நடப்பாண்டின் ஜுலை மாதத்தில் 23-ந் தேதி வரை, அமெரிக்காவில் மொத்தம் 17 வங்கிகள் திவால் ஆகி உள்ளன. சென்ற ஏழு மாதங்களில் அந்நாட்டில் திவால் ஆன வங்கிகளின் எண்ணிக்கை 103-ஆக உயர்ந்துள்ளது. ஆக, மாதத்திற்கு சராசரியாக 15 வங்கிகள் திவால் ஆகி உள்ளன. சென்ற 2009-ஆம் ஆண்டில், அமெரிக்காவில் மொத்தம் 140 வங்கிகள் திவால் ஆகின. நடப்பு ஆண்டில், திவால் ஆகும் வங்கிகள் எண்ணிக்கை இதை விட அதிகமாகும் நிலை உருவாகி உள்ளது. அமெரிக்காவில் வேலை இழப்பு அதிகரித்து வருவதால், வங்கிகளிலிருந்து கடன் வாங்கியவர்களால், கடனை திரும்ப செலுத்த முடியவில்லை. இதனால், அந்நாட்டில் வங்கிகள் திவால் ஆவது தொடர்கதையாகி வருகிறது. பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்ள அந்நாடு வழங்கிய சலுகைகளால், நடப்பு 2010-ஆம் ஆண்டில், அந்நாட்டின் நிதி பற்றாக்குறை 1.47 லட்சம் கோடி டாலராக மிகவும் உயர்ந்து விடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் காட்டிலும் அதிகமாகும். அமெரிக்காவின் நிதி பற்றாக்குறை, அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது 10 சதவீதம் என்ற அளவில் உள்ளது. நம் நாட்டின் நிதி பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.5 சதவீதமாக உள்ளது.
வங்கிகளுக்கான வட்டி விகிதம் உயர்வு
வங்கிகளுக்கான குறைந்த கால கடன் மீதான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் ரிசர்வ் வங்கி, மற்ற வணிக வங்கிகளுக்கான குறைந்த கால கடன் மீதான வட்டி விகிதத்தை உயர்த்தி, புதிய வட்டி விகித கொள்கையை அறிவித்துள்ளது. இதன்படி, வணிக வங்கிகளுக்கு அளிக்கும் குறைந்த கால கடன் மீதான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்),0.25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.இனிமேல், புதிய ரெப்போ ரேட், 5.75 சதவீதமாக இருக்கும். இதேபோல், கடன் பெறுவதற்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெப்போரேட்), 0.50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான புதிய வட்டி வீதம் இனிமேல் 4.5 சதவீதமாக இருக்கும்.வங்கிகள், ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்பு விகிதத்தில் (சி.ஆர்.ஆர்.,)எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அது, 6 சதவீத மாகவே தொடர்ந்து நீடிக்கும்.மேலும், 2010-11ம் நிதியாண்டின் இறுதியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.5 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.ரிசர்வ் வங்கி ஏற்கனவே வெளியிட்டிருந்த அறிவிப்பில், இந்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி, 8சதவீதமாக இருக்கும் என,மதிப்பிடப்பட்டிருந்தது.புதிய வட்டி வீத கொள்கையை அறிவித்து, ரிசர்வ்வங்கி கவர்னர் சுப்பாராவ் பேசுகையில், 'கடந்த ஏப்ரலில் இருந்தே, நாட்டின்பொருளாதார நிலை மேம்பட்டு வருகிறது' என்றார்.இது குறித்த மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், 'பணவீக்கத்தை கட்டுப்படுத்து வதற்காகவே வட்டி வீதம் உயர்த்தப் பட்டுள்ளது.பொருளாதார வளர்ச்சிக்கு இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது' என்றார்.
Tuesday, July 27, 2010
ரிசர்வ் வங்கியின் ரெப்போ ரேட் அதிகரிப்பு
ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் அதிகரிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி வட்டி விகித கொள்கையை இன்று வெளியிட்டது. அதில் ரெப்போ ரேட் விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தியுள்ளது. ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 0.50 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 4.50 சதவீதமாக இருக்கிறது. வங்கிகளுக்கான ரொக்க கையிருப்பு விகிதம் ( சி.ஆர்.ஆர்., ) அதே 6 சதவீதத்திலேயே இருக்கிறது. மேலும் 2010 - 2011 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.5 சதவீதமாக அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
சூரிய சக்தி மூலம் 1,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி
அடுத்த மூன்று ஆண்டுகளில், நம் நாட்டில் சூரிய சக்தி மூலம் 1,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என மத்திய மின்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்தார். இதில் 500 மெகா வாட் சூரிய வெப்பத்தின் வாயிலாகவும், மற்றொரு 500 மெகா வாட் சூரிய ஒளி வாயிலாகவும் பெறப்படும் என அவர் கூறினார். மத்திய அரசுக்கு சொந்தமான பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் மின் உற்பத்தி திட்டங்களுக்கு தேவையான நிதி உதவி வழங்கி வருகின்றன. ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் கிராமப்புறங்களில் அமைக்கப்படும் மின் உற்பத்தி திட்டங்களுக்கு கடன் வசதி அளித்து வருகிறது. இந்த இரண்டு நிறுவனங்களின் ஆதரவுடன் 2013-ஆம் ஆண்டுக்குள் 1,000 மெகா வாட் சூரிய மின் சக்தி உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
பருப்பு விலை சரிவு
உணவுப் பொருட்களை, 'ஸ்டாக்' வைத்துள்ள வியாபாரிகள் மீது, அரசு அதிரடி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பரவிய தகவலால், பருப்பு விலை சரிந்துள்ளது. பருப்பு விலையை கட்டுப்படுத்தும் விதமாக, ஆன்-லைன் வர்த்தகத்தில் இருந்து, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை மத்திய அரசு, நீக்கியது. இருந்தும், வடமாநிலங்களில் வெள்ளம் காரணமாக, விளைச்சலில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
நவம்பர் 2009லிருந்து கடந்த வாரம் வரை, அனைத்து பருப்பு வகையிலும் நிலையில்லா தன்மையே நீடித்தது. இதனால், பெரிய வியாபாரிகளை தவிர, நடுத்தர மற்றும் சிறிய மளிகை கடை வியாபாரிகள், விற்பனைக்கு ஏற்ப பருப்பு வகைகளை கொள்முதல் செய்தனர். எதிர்க்கட்சிகளின் போராட்டம் மற்றும் தமிழகத்தில் வர இருக்கும் சட்டசபைத் தேர்தலை கருத்தில் கொண்டு, மத்திய, மாநில அரசுகள், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக, வடமாநிலம், தமிழகத்தில் அனைத்து வகையான பருப்புகளையும் இருப்பு வைத்துள்ள வியாபாரிகளை கண்காணிக்க உளவுத் துறைக்கு, மத்திய, மாநில அரசுகள், ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளன. இத்தகவல் வியாபாரிகள் மத்தியில் பரவி, இருப்பு வைத்துள்ள பருப்பு வகைகளை விற்பனைக்கு அனுப்ப துவங்கி விட்டனர். வடமாநிலங்களில் இருந்தும் தமிழகத்துக்கு பருப்பு வரத்து, திடீர் என அதிகரித்துள்ளதால், விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம், துவரம் பருப்பு மொத்த விலையில் குவிண்டால் 7,600 ரூபாய்க்கு விற்றது, நேற்று 6,950 ரூபாய்க்கும், 9,800 ரூபாய்க்கு விற்ற பாசி பருப்பு, 8,400 ரூபாய்க்கும் விற்கிறது. மேலும் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். துவரம் பருப்பு, பாசி பருப்பின் விலை சரிவடைந்த நிலையில், உளுந்தம் பருப்பின் விலையில் மாற்றமில்லை. இச்சரிவு மேலும் தொடரும் என்பதால், வியாபாரிகள் மத்தியில் கடும் கிலியை ஏற்படுத்தியுள்ளது.
Wednesday, July 21, 2010
உலகின் முதல் பெராரி தீம் பார்க்
உலகின் முதல் பெராரி தீம் பார்க் துபாயில் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து துபாய் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : துபாய் நாட்டில் முதல்முறையாக பார்முலா ஒன் கார் போட்டிகள் நடைபெற்றன. அப்போது. அந்த போட்டிகளுக்கு, உலக மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்ததாகவும், அதனை கவுரவப்படுத்தும் பொருட்டு, பெராரி உலகம் துபாயில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பெராரி உலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பெராரி தீம் பார்க், சுற்றுலா பயணிகள் அதிகம் பார்வையிடும் சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது. இந்த தீம் பார்க 100 நாட்கள் திறந்திருக்கும் என்றும், இந்த தீம் பார்க்கில், உலகின் அதிவேக ரோலர் கோஸடர் நிறுவப்பட்டு உள்ளதாகவும், பெராரி பார்முலா ஒன் காரில் பயணம் செய்த உணர்வு, இந்த ரோலர் கோஸ்டரில் பயணிக்கும்போது ஏற்படும் என்றும் துபாயின் முக்கிய சுற்றுலாத் தலமான யாஸ் மரினா சர்க்யூட்டில், கடந்த நவம்பர் 2009 காலம் வரை பார்வையிட்ட மக்களின் எண்ணிக்கையை, இந்த தீம்பார்க் பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை மிஞ்சி விட்டதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tuesday, July 20, 2010
கச்சா எண்ணெய் விலை உயர்வு
ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை 77 அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. நியூயார்க் மெயின் கான்ட்ராக்ட் கச்சா எண்ணெய்யின் செப்டம்பர் டெலிவரிக்கான விலை 5 சென்டுகள் அதிகரித்து 77.63 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 9 சென்டுகள் அதிகரித்து 76.31 அமெரிக்க டாலராக இருந்தது.
சச்சினின் 'ரத்த சரித்திரம்'
இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் ரத்தத்துடன் வெளிவர உள்ளது 'டெண்டுல்கர் ஓபஸ்' என்ற அவரது சுயசரிதை புத்தகம். சர்வசேத கிரிக்கெட் அரங்கில் சாதனை வீரராக வலம் வருகிறார் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர். டெஸ்ட் (13, 455) மற்றும் ஒரு நாள் அரங்கில் (17598) அதிக ரன் குவித்து சாதனை படைத்துள்ளார். கிரிக்கெட் கடவுளாக வர்ணிக்கப்படும் சச்சினின் வாழ்க்கை வரலாறு அடங்கிய சுயசரிதை புத்தகத்தை, லண்டனை சேர்ந்த கிரஹான் மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது. 'டெண்டுல்கர் ஓபஸ்' என்ற இப்புத்தகம் அடுத்த ஆண்டு உலககோப்பை (50 ஓவர்) துவங்குவதற்கு முன், பிப்ரவரி மாதம் வெளியிடப்பட உள்ளது. தனிச்சிறப்பு: கையெழுத்துப் பக்கத்தில் சச்சினின் ரத்தம் இடம் பெற்றிருப்பது தான் இப்புத்தகத்தின் தனிச்சிறப்பு. காகிதக் கூழில், அவரது ரத்தம் தோய்த்து வெளிவர உள்ளது. மொத்தம் 852 பக்கங்கள் கொண்ட இப்புத்தகம் 37 கி.கி., எடை கொண்டது. இதன் விலை 37 லட்சம் ரூபாய். மொத்தம் 10 பிரதிகள் வெளிவர உள்ளன. இதற்கான முன்
பதிவும் முடிந்து விட்டது. ரத்தத்தின் ரத்தங்கள்: சச்சினின் ரத்தத்தின் ரத்தங்களாக கருதப்படும் ஏழை ரசிகர்களால் இப்புத்தகத்தை வாங்க முடியாது. இருப்பினும் 1 லட்சம் மற்றம் 1.50 லட்சம் ரூபாய்களிலும் இப்புத்தகம் வெளியிடப் பட்டுள்ளது. ஆனால் இவற்றில் சச்சினின் ரத்தம் இடம் பெறாது. கையெழுத்து மட்டுமே இடம் பெறும். இது தவிர, 10 ஆயிரம் மற்றும் 15 ஆயிரம் ரூபாய்களிலும் இப்புத்தகத்தை வெளியிட கிரஹான் மீடியா ஏற்பாடு செய்து வருகிறது. அவரது டி.என்.ஏ., பற்றி தகவல்களும் இதில் இடம் பெற உள்ளன. இதற்காக அவரது உமிழ்நீர் கேட்கப்பட்டு உள்ளது. புதுமை: இது குறித்து கிரஹான் மீடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கார்ல் போவ்லர் கூறுகையில்,'' கிரிக்கெட் அரங்கின் கடவுளாக வர்ணிக்கப்படுகிறார் சச்சின். இதனால் 'டெண்டுல்கர் ஓபஸ்' புத்தகத்தில் புதுமை செய்ய நினைத்தோம். அவரது ரத்தம் தோய்ந்த பக்கம் இடம் பெறுவதால், இப்புத்தகம் தனிச்சிறப்பை பெறுகிறது. உலககோப்பை தொடரை ஒட்டி இப்புத்தகத்தை வெளியிட திட்டமிட்டுள் ளோம்,'' என்றார்.
இதற்கு முன்... : கிரிக்கெட் கடவுள் சச்சினின் சுயசரிதை புத்தகம் 37 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுவது பெரும் சாதனையாக கருதப்படுகிறது. ஆனால் இதற்கு முன் மைக்கேல் ஏஞ்சலோ என்ற புத்தகம் 49 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ள வரலாறு உள்ளது. கலைத்திறனை வெளிப்படுத்தும் இப்புத்தகம் கைகளினால் தயாரிக்கப்பட்டது. 30 கிலோ எடை கொண்டது. மொத்தம் 33 பிரதிகள் மட்டுமே வெளியிடப்பட்ட இப்புத்தகம் மார்பிள் மற்றும் வெல்வெட் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டது. நியூயார்க் பொது நூலகத்தில் இது இடம் பெற்றுள்ளது. இதனை குரூப்போ எப்.எம்.ஆர்., நிறுவனத்தினர் வெளியிட்டுள்ளனர்.
Monday, July 19, 2010
தங்கம் விலை உயர்வு
தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 அதிகரித்தது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1709 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.18380 ஆகவும் இருந்தது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.31.55 க்கும், பார் வெள்ளி ரூ.29510 க்கும் விற்பனை செய்யப்பட்டது.
பங்குச்சந்தை நிலவரம்
மும்பை பங்குச்சந்தை இன்று சரிவுடன் தொடங்கியது சரிவுடனேயே முடிந்தது. காலை 9.17 மணியளவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 42.17 புள்ளிகள் குறைந்து 17913.65 ஆக வர்த்தகமாகியிருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 14.75 புள்ளிகள் குறைந்து 5379.15 ஆக வர்த்தகமாகியிருந்தது. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 27.40 புள்ளிகள் குறைந்து 17928.42 ஆக வர்த்தகமாகியிருந்தது . தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 7.45 புள்ளிகள் குறைந்து 5386.45 ஆக வர்த்தகமாகியிருந்தது.
Saturday, July 17, 2010
பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு
பெட்ரோல், டீசல் விலையை முன்பு மத்திய பெட்ரோலிய அமைச்சகமே நிர்ணயம் செய்து வந்தது. இதன் காரணமாக இந்திய எண்ணை நிறுவனங்ளுக்கு கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இந்த இழப்பு கடந்த மாதம் மிக அதிக அளவுக்கு சென்றது. கடந்த மாதம் மத்திய அமைச்சரவை, இது தொடர்பாக கூடி விவாதித்தது. அப்போது பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்து கொள்ள அதிகாரம் அளிக்கப்பட்டது. இதையடுத்து பெட்ரோல், டீசல் விலைகள் கணிசமாக உயர்ந்தன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை மாறுவதற்கு ஏற்ப இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலைகளை மாற்றி அமைக்க எண்ணை நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இந்த விலை மாற்றத்தை எத்தகைய கால இடைவெளியில் செய்வது என்பதில் இந்திய எண்ணை நிறுவனங்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனமும், பாரத் பெட்ரோலியம் நிறுவனமும் இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை பெட்ரோல் விலையை மாற்றி அமைக்கலாம் என்று யோசனை கூறின. இதை இந்தியன் ஆயில் நிறுவனம் ஏற்கவில்லை. இரண்டு வாரத்துக்கு ஒரு தடவை விலை நிர்ணயம் செய்தால், அது பதுக்கலுக்கு வழி வகுத்து விடும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் கூறியது. இது தொடர்பாக மத்திய பெட்ரோலிய மந்திரி முரளி தியோரா எண்ணை நிறுவன பிரதிநிதிகளை அழைத்து பேச்சு நடத்தினார். அதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டது. அதன்படி மாதத்துக்கு ஒரு தடவை பெட்ரோல் விலையை மாற்றி அமைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவின் படி வரும் 25 அல்லது 26-ந் தேதி பெட்ரோல் விலை மாற்றி அமைக்கப்பட உள்ளது. சர்வதேச சந்தையில் தற்போது கச்சா எண்ணை விலை சற்று குறைந்துள்ளது. எனவே பெட்ரோல் விலையை அதற்கு ஏற்ப சற்று குறைக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. அந்த வகையில் பெட்ரோல் விலை விரைவில் லிட்டருக்கு 20 பைசா குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத்பெட்ரோலியம் நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் மூன்றும் இந்த விலை குறைப்பை ஒரே மாதிரி நடைமுறைப்படுத்தும். தனியார் எண்ணை நிறுவனங்களான ரிலையன்ஸ், எஸ்ஸார் நிறுவனங்களும் அரசு எண்ணை நிறுவனங்களை பின்பற்றி விலையை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செல்போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
அடுத்த நான்கு ஆண்டுகளில் (2014ம் ஆண்டுக்குள்) நம் நாட்டில் செல்போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 99.30 கோடியாக உயரும் என ஆய்வு நிறுவனமான கார்ட்னர் தெரிவித்துள்ளது. நடப்பு 2010ம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் 66 கோடி செல்போன் வாடிக்கையாளர்கள் இருப்பர் என்றும் அதன் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. செல்போன்கள் பயன்பாடு அதிகரிப்பதில், உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவே இரண்டாவது மிகப் பெரிய சந்தையாக உள்ளது. நடப்பாண்டு மே மாத நிலவரப்படி, நாட்டில் உள்ள செல்போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சுமார் 62 கோடியாகும். இது, சென்ற ஆண்டு இறுதியில் 52.50 கோடியாக இருந்தது. அதாவது, ஆண்டுக்கு 10 கோடி என்ற அளவில் இந்த எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது, அடுத்த நான்கு ஆண்டுகளில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 100 கோடி என்ற சாதனை அளவை எட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.நடப்பு நிதி ஆண்டில் இந்திய தொலைத் தொடர்பு துறையில் பல்வேறு நிறுவனங்கள் ஒட்டுமொத்த அளவில் ரூ.4,000 கோடி முதலீடு மேற்கொள்ளும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் 100 கோடி செல்போன் இணைப்புகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் வகையில் இந்த முதலீடு மேற்கொள்ளப்பட உள்ளது.
விளைச்சல் குறைவால் மாம்பழ விவசாயம் நஷ்டம்
வத்திராயிருப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான மாம்பழ சீசன் கடந்த வாரத்துடன் முழுமையாக முடிவடைந்தது. எதிர்பார்த்த விளைச்சல் இல்லாததால் அனேக இடங்களில் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது.
ராஜபாளையம், ஸ்ரீவி., வத்திராயிருப்பு பகுதிகளில் 15,000 ஏக்கருக்கு மேல் மாம்பழ விவசாயம் நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் துவங்கி ஜூன் வரை மூன்று மாதங்கள் மாம்பழ சீசன் களைகட்டும்.
கடந்தாண்டு பருவமழை சரிவர பெய்யாததால் இந்த ஆண்டு சீசனில் வெயில் அதிகரித்து மாமரங்களில் பூத்த பூக்கள் எல்லாம் உதிர்ந்தன. வறட்சி நிலவியதால் மரங்களுக்கு நீர்பாய்ச்சவும் வழியின்றி போனது.உதிர்ந்த வடுக்கள்: இதன் காரணமாக இந்தாண்டு மாம்பழ சீசன் மந்தமாக துவங்கியது. சீசன் துவங்கிய பிறகு இடையிடையே சிறிது சாரல் மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைந்து ஒருசில பகுதிகளில் மரங்களில் புதிய பூக்கள் பூக்க துவங்கியது. பூத்தவையும் உதிரவில்லை. மே மாதம் ஒரளவு விளைச்சல் அதிகரித்தது. ஆனால் அதுவும் கடும் வெயிலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் வடுக்களிலேயே உதிர்ந்தது. தாமதமாக பூத்த பூக்களில் ஒருசில இடங்களில் விவசாயிகள் தண்ணீரை தெளித்து மரங்களுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தி பூக்களை வெப்பத்திலிருந்து பாதுகாத்ததால் நஷ்டத்திலிருந்து தங்களை காத்துக்கொண்டனர்.விவசாயிகள் ஏமாற்றம்: மற்ற அனைத்து பகுதிகளிலும் விவசாயிகளுக்கு நஷ்டமே ஏற்பட்டது. வழக்கமாக ஜூன் மாதம் முடிய வேண்டிய சீசன் இந்தாண்டு இடையே தாமதமாக பூத்த பூக்களால் ஜூலை வரை நீடித்தது. அங்கொன்றும் இங் கொன்றுமாக காய்த்த காய்கள் அனைத்தும் கடந்த வாரத்துடன் முழுமையாக பறிக்கப் பட்டன.சொந்த நிலங்களில் விவசாயம் செய்பவர்களை தவிர குத்தகை எடுத்து விவசாயம் செய்தவர்களுக்கும் மற்ற விவசாயிகளுக்கும் எதிர் பார்த்த விளைச்சல் இல்லாததால் நஷ்டமே ஏற்பட்டது. இந்தாண்டு சீசன், நஷ்டத்துடன் முடிவடைந்ததால் விவசாயிகள் வருத்தத்தில் உள்ளனர்.
கூகிளின் புதிய இணையதளம் "கூகிள் பைஃபர்"
இணையதள உலகில் அனைத்து பாகங்களிலும் தனது ஆக்கிரமிப்பை செலுத்தி வரும் கூகிள் நிறுவனம் சமீபத்தில் கூகிள் பைபர் எனும் அதிவேக இணைய இணைப்புக்களை வழங்கவுள்ளதாக அறிவித்திருந்தது. இந்த திட்டத்திற்கு கூகிள் பைஃபர் எனும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அனைத்து வேலைகளிலும் மும்மூரமாக ஈடுபட்டுவரும் கூகிளுக்கு அதிகப்படியான ஆதரவு அனைத்துத் தரப்பிலும் கிடைத்துக்கொண்டே இருக்கிறது. இந்த அதிவேக இணைய இணைப்பை பெற்றுக்கொள்ள முற்பதிவுகளும் மிக வேகமாக இடம்பெற்று வருகிறது. இதுவரை 1100 க்கும் மேற்பட்டோர் தங்களது பதிவுகளை மேற்கொண்டுள்ளார்கள் என கூகிள் தெரிவித்துள்ளது. எனவேதான் கூகிள் பைஃபர் தொடர்பான செய்திகளை தனது பாவனையாளர்களிடம் பகிர்ந்து கொள்ள கூகிள் புதிய இணைய தளத்தை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. அங்கு கூகிள் பைஃபர் தொடர்பான செய்திகளையும் அதன் வளர்ச்சிக்கட்டத்தினையும் கூகிள் எங்களோடு பகிர்வதோடு எமது கருத்துக்களை வழங்கவும் வழியமைத்துள்ளது. கூகிள் பைஃபர் தொடர்பான விடயங்களை நீங்களும் அறிந்து கொள்ள ஆர்வமாக இருந்தால் இந்த புதிய தளத்துக்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள்.
சி-15 ராக்கெட் விண்ணில் செலுத்தி சாதனை
பி.எஸ்.எல்.வி., சி-15 ராக்கெட், ஐந்து செயற்கைக்கோள்களுடன், திட்டமிட்டபடி 12-07-2010 விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்து சாதனை படைத்துள்ளது. இதுவரை செலுத்தப்பட்டுள்ள 16 பி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்களும் தொடர் வெற்றியைப் பெற்றுள்ளன. இவ்வாண்டு இறுதிக்குள் தொலைத்தொடர்பு மற்றும் வேளாண் செயற்கைக்கோள்கள் ஏவப்பட உள்ளதாக, இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இந்தியாவின், "கார்ட்டோசாட்-2 பி' தொலை உணர்வு செயற்கைக்கோள், இந்திய பொறியியல் மாணவர்கள் தயாரித்த ஸ்டட்சாட், அல்சாட் - 2ஏ, அய்சாட் - 1 மற்றும் டிசாட்- 1 ஆகிய துணை செயற்கைக்கோள்களுடன், பி.எஸ்.எல்.வி., சி-15 ராக்கெட், 56 மணி நேர, "கவுன்ட் டவுனு'க்குப் பின், நேற்று காலை சரியாக 9.22 மணிக்கு விண்ணில் சீறிப் பாய்ந்தது.ஏவப்பட்ட 20வது நிமிடத்தில், 9.42 மணிக்கு ஐந்து செயற்கைக் கோள்களையும், பூமியிலிருந்து 637 கி.மீ., தொலைவில், அவற்றுக்கான வட்டப்பாதையில் பி.எஸ்.எல்.வி., ராக்கெட் நிலை நிறுத்தியது. திட்டமிட்டபடி ராக்கெட் விண்ணில் பாய்ந்ததும், விஞ்ஞானிகள் கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:பி.எஸ்.எல்.வி., சி-15 ராக்கெட் எதிர்பார்த்தபடி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. ராக்கெட் ஏவுவதற்கு, இரண்டு வாரங்களாக சந்தித்த தொழில்நுட்ப இடர்ப்பாடுகள் சரி செய்யப்பட்டு, ஏவப்பட்டுள்ளது. இதற்காக உழைத்த அனைத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துக்கள்.வரும் செப்., இறுதியில் ஜிசாட் - 5 என்ற தொலைநோக்கு செயற்கைக் கோள், ஜி.எஸ்.எல்.வி.,-எப் 06 ராக்கெட்டுடன் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. வேளாண் திட்டங்களுக்கான ரிசோசாட் - 2 செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி.,-பி 16 ராக்கெட்டுடன் அக்., இரண்டாம் வாரத்தில் விண்ணில் ஏவப்பட உள்ளது.விண்வெளிக்கு மனிதனை அனுப்புவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. விண்வெளி சூழலுக்கு ஏற்ப மனித உடலை தயார்படுத்துதல், ராக்கெட் ஏவுவதற்கான தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கும் இன்னும் மூன்று ஆண்டுகள் தேவைப்படுகின்றன.
விண்வெளிக்கு 2013ல் ஆளில்லா விண்கலத்தையும், 2017ல் மனிதனையும் அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.சந்திரயான் - 1 நிலவிலிருந்து எடுத்து அனுப்பிய போட்டோக்களை ஆராய்ந்து வருகிறோம். புகைப்படங்களில் காணப்படும் நிலவின் நிழல் பகுதிகளில் நீர் மற்றும் கனிம வளங்கள் உள்ளனவா என்பதைப் பற்றி ஆராய, வரும் 2013ல் சந்திரயான் - 2 அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.கடந்த ஏப்., 15ல் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டின் கிரையோஜெனிக் இன்ஜின் பழுதானதற்கான காரணத்தை ஆராய்ந்து வருகிறோம். ஓராண்டுக்குள் கிரையோஜெனிக் இன்ஜின் இந்திய தொழில் நுட்பத்தில் வெற்றிகரமாக தயாரிக்கப்படும். நான்கு டன் வரை எடையுள்ள செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் அடுத்த தலைமுறைக்கான, "ஜி.எஸ்.எல்.வி.,-எம்கே 3' ராக்கெட் தயாரிப்பதற்கான சோதனை முயற்சிகள் நடந்து வருகின்றன.இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.
பி.எஸ்.எல்.வி., சி-15, கார்டோசாட் - 2 பி திட்ட இயக்குனர் உன்னிகிருஷ்ணன் கூறியதாவது: பி.எஸ்.எல்.வி., சி-15 ராக்கெட், 80 கோடி ரூபாயில் வடிவமைக்கப்பட்டது. நான்கு நிலைகளாக பிரிக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்டது. ஒன்று, மூன்றாம் நிலை திட எரிபொருளாலும், இரண்டு, நான்கு நிலைகள் திரவ எரிபொருளாலும் இயக்கப்பட்டது. ராக்கெட் 295 டன் எடையும், 44.4 மீட்டர் நீளமும் கொண்டது."கார்டோசாட் - 2 பி' செயற்கைக்கோள், 175 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டது. 0.8 மீட்டர் பகுத்தறியும் திறன் கொண்ட, அதிநுட்ப கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பூமியில் ஓடும் காரைக் கூட, துல்லியமாக படம் பிடிக்கலாம்.
செயற்கைக்கோள்கள் நகர்புற, கிராமப்புற கட்டமைப்பு வசதிகள், வட்டச் சாலைகள் அமைத்தல், நெடுஞ்சாலை மேம்பாடு, வனப்பகுதிகள் மற்றும் சதுப்பு நில காடுகளைக் கண்டறிதல், எரிவாயு குழாய் இணைப்பு, புதிய கால்வாய்கள் அமைப்பதற்காக உகந்த இடங்களைக் கண்டறிதல், காடுகளில் உள்ள மரங்களின் எண்ணிக்கையை கணக்கிடுதல் உள்ளிட்ட, நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு பெரிதும் பயன்படும்.மதுரை, ஐதராபாத், வாரணாசி, திருப்பதி மற்றும் நாக்பூர் ஆகிய நகரங்களின் படங்களை, கார்டோசாட் - 2 பி இன்று காலை 9.40 மணிக்கு, விண்வெளி கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்ப உள்ளது.
கார்டோசாட் - 2 பி, ஐசாட் - 1 மற்றும் ஸ்டட்சாட் ஆகிய மூன்று செயற்கைக்கோள்களும் அதற்கான வட்டப்பாதையை அடைந்தது, நேற்று காலை 11.30 மணிக்கு உறுதி செய்யப்பட்டது. ஸ்டட்சாட் 11.30 மணி அளவில் பூமியை ஒரு முறை, அதன் சுற்றுப்பாதையில் சுற்றி வந்தது. கார்டோசாட் - 2 பி ஒரு நாளைக்கு 14 முறை பூமியைச் சுற்றி வரும்; இதற்கான ஆய்வுக்காலம் ஐந்து ஆண்டுகள். ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ராக்கெட் ஏவுதளம் 1,000 கோடி ரூபாய் செலவில் அமைக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு உன்னிகிருஷ்ணன் கூறினார்.பேட்டியின் போது ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மைய இயக்குனர் தத்தன், விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குனர் வீரராகவன், தொலை உணர்வு மற்றும் சிறு செயற்கைக்கோள்களுக்கான திட்ட இயக்குனர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளும் உடனிருந்தனர்.
பி.எஸ்.எல்.வி., சி-15 ராக்கெட் நேற்று காலை 9.42 மணிக்கு அதன் இலக்கை அடையும் வரை, இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பரபரப்பு நிலவியது. ராக்கெட் அதன் இலக்கை அடைந்தவுடன், விஞ்ஞானிகள் ஒருவருக்கு ஒருவர் கைகுலுக்கியும், கட்டித் தழுவியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.இந்திய விண்வெளி ஆய்வில் ஒரு முக்கிய நிகழ்வான இந்த முயற்சியை, திட்டக்கமிஷன் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா தனது மனைவியுடன் நேரில் வந்து, விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். அவருடன் இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் எம்.ஜி.கே.மேனனும் வாழ்த்தினர்.
பெங்களூரில் உள்ள நித்தி மீனாட்சி தொழில்நுட்ப மையம் மற்றும் ஆந்திர, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த ஆறு பொறியியல் கல்லூரி மாணவர்கள் 30 பேரும் இணைந்து, ஸ்டட்சாட் செயற்கைக்கோளை தயாரித்துள்ளனர். 55 லட்சம் ரூபாய் செலவில் இந்த செயற்கைக்கோளை தயாரித்துள்ளனர்.இந்த செயற்கைக்கோள், பருவ நிலை மாற்றம் மற்றும் வன வளங்கள் குறித்த தகவல்களைத் தயாரித்து அனுப்பும். இது, இரண்டு ஆண்டுகள் விண்ணில் ஆய்வுகளை நடத்தும். "இளைஞர்களான எங்களாலும் நாட்டுக்கு உதவ முடியும்' என பொறியியல் மாணவர்கள், செயற்கைக்கோளை தயாரித்து சாதித்துக் காட்டியுள்ளனர்.
பி.எஸ்.எல்.வி., சி-15, பி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட் வரிசையில் 17வது ஆகும். கடந்த 1993 முதல் இதுவரை, பி.எஸ்.எல்.வி., - டி 1, பி.எஸ்.எல்.வி., சி-3 உள்ளிட்ட 17 ராக்கெட்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன. இவற்றில், 1993ம் ஆண்டு, செப்டம்பர் 20ம் தேதி, ஐ.ஆர்.எஸ்., - 1 ஈ செயற்கைக்கோளுடன் விண்ணில் செலுத்தப்பட்ட பி.எஸ்.எல்.வி., - டி 1 ராக்கெட் தோல்வியடைந்தது.அதன் பின், நேற்று வரை செலுத்தப்பட்டுள்ள 16 பி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்களும் தொடர் வெற்றியைப் பெற்றுள்ளன. இவற்றில் கடந்த 2008ம் ஆண்டு, அக்டோபர் 22ம் தேதி, சந்திரயான் - 1 செயற்கைக்கோளுடன் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி., சி-11 ராக்கெட் குறிப்பிடத்தக்கது.
பி.எஸ்.எல்.வி., ராக்கெட், விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்காக, இந்திய விஞ்ஞானிகளை முதல்வர் கருணாநிதி பாராட்டியுள்ளார்.பி.எஸ்.எல்.வி., ராக்கெட் நேற்று வெற்றிகரமாக ஏவப்பட்ட செய்தி கிடைத்ததும், இந்திய விண்வெளித் துறை விஞ்ஞானிகளுக்கு முதல்வர் கருணாநிதி பாராட்டு தெரிவித்துள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:நமது நாட்டு விஞ்ஞானிகளின் கடுமையான உழைப்பின் பயனாக விண்வெளி ஆராய்ச்சித் துறையில் இந்தியா உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக திகழ்ந்து, படிப்படியாக முன்னேறி வருகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பறக்கவிடப்பட்ட பி.எஸ்.எல்.வி., சி- 15 ராக்கெட் ஐந்து செயற்கைக்கோள்களைச் சுமந்து கொண்டு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து சென்று, நமது நாட்டு விஞ்ஞானிகளின் மகத்தான ஆற்றலை உலகுக்கு பறைசாற்றியுள்ளது.இந்த மகத்தான சாதனையை நிகழ்த்தியுள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறை விஞ்ஞானிகள் அனைவருக்கும் தமிழக மக்களின் சார்பிலும், என் சார்பிலும் மனமார்ந்த பாராட்டுக்கள்.இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
கல்விக்காக ரூ.2.25 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
'இந்தியாவில் கல்விக்காக 2.25 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது,' என மத்திய மனித வளத்துறை மேம்பாட்டு இணை அமைச்சர் புரந்தேஸ்வரி தெரிவித்தார்.விருதுநகரில் நடந்த காமராஜர் பிறந்த தின விழாவை முன்னிட்டு விருதுநகர், மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி, திருமங்கலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2ல் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு காமராஜர் விருது வழங்கும் விழா நடந்தது. மாவட்ட காங்கிரஸ் அணி தலைவர் கணேசன், மாணவரணி டி.ஏ.நவீன், மாணிக்க தாகூர் எம்.பி., உட்பட காங்., கட்சி நிர்வாகிகள் அனைவரும் இதில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின்போது மத்திய அமைச்சர் புரந்தேஸ்வரி பேசியதாவது: கமராஜர் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் 15303 பள்ளிகளை 30000 பள்ளிகளாக மாற்றினார். பள்ளிக்கு படிக்க வரும் மாணவர்கள் சதத்தை 80 சதமாக உயர்த்தினார். கல்வி என்பது வகுப்பறையும், புத்தகமும், மதிப்பெண்ணும்தான் என்ற நிலை இன்று உள்ளது.மத்திய அரசு இந்தாண்டு கல்விக்காக 2.25 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் 1.25 லட்சம் கோடி ஆரம்பக்கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மாணிக்க தாகூர் எம்.பி., தொடர்ந்து வலியுறுத்தியதின் பேரில் விருதுநகரில் 16 அல்லது 17ம் தேதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி துவக்கப்படுகிறது. இந்த பகுதியில் விரைவில் பாலிடெக்னிக் துவக்கப்படும், என்றார். பின்னர் 1,300 மாணவ, மாணவிகள், 167 ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகளுக்கு காமராஜர் விருது வழங்கப்பட்டது.
பங்கு வர்த்தக நிலவரம்
இந்திய பங்குச்சந்தை நேற்று (16/07/2010) நல்ல ஏற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில் (9.02 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 8.72 புள்ளிகள் அதிகரித்து 17918.18 புள்ளிகளோடு காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 0.30 புள்ளிகள் அதிகரித்து 5379.05 புள்ளிகளோடு காணப்பட்டது. தொடர்ந்து, 9.13 மணியளவில், சென்செக்ஸ் 0.83 புள்ளிகளும், நிப்டி 0.10 புள்ளிகளும் சரிவு கண்டு, பின் மீண்டும் 9.26 மணியளவில் சென்செக்ஸ் 8.13 புள்ளிகளும், நிப்டி 2.40 புள்ளிகளும் உயர்ந்தன. வர்த்தகத்தின் போது அவ்வப்போது இறக்க நிலையும் காணப்பட்டது. இன்று காலை வர்த்தக நேரம் முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 46.36 புள்ளிகள் அதிகரித்து 17955.82 புள்ளிகளோடு காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 15.15 புள்ளிகள் அதிகரித்து 5393.90 புள்ளிகளோடு காணப்பட்டது.இன்றைய நிலவரப்படி இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் தொடங்கி ஏற்றத்துடனேயே முடிந்தது.
பணவீக்கம் 5-6 சதவீதம் குறைய வாய்ப்பு
இந்திய ரூபாயின் பணவீக்கம் 10.55 சதவீதமாக உயர்ந்திருந்தாலும், தென்மேற்குப் பருவ சாகுபடி முடிந்தபின், இந்த ஆண்டின் இறுதியில், 5 முதல் 6 சதவீதமாக குறையும் என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். டில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரணாப் முகர்ஜி இவ்வாறு கூறியுள்ளார். “இப்போது 10.55 சதவீதமாக உயர்ந்துள்ளது. பணவீக்கம் இரட்டை இலக்கத்திலேயே வட்டமிட்டுக்கொண்டிருக்கிறது. தென் மேற்கு பருவ மழையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் சாகுபடி முடிந்தததும் அதன் விலைவாசி குறையத் தொடங்கும். அதற்கான அறிகுறி தென்படத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் 5 முதல் 6 சதவீதம் ஆகக் குறையும்” என்று பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
டில்லி்யில் மட்டும் மதிப்புக்கூட்டு வரி குறைவு
டில்லி மக்கள் அண்டை மாநிலங்களுக்குச் சென்று குறைந்த விலையில் டீசல் வாங்கி வருவதைத் தடுக்க டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை 7.5 சதவிகிதம் குறைத்துள்ளது டெல்லி அரசு. டீசல் மீது இதுவரை 20 விழுக்காடாக இருந்த மதிப்புக் கூட்டு வரியை 12.5 விழுக்காடாகக் குறைத்துள்ளது டெல்லி அரசு. இதனால் டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.70 குறைந்து ரூ.37.50 ஆகியுள்ளது. டில்லி முதலமைச்சர் ஷீலா தீட்சி்த் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டில்லியில் டீசல் விலை அதிகமாக இருந்தத்தால் பக்கத்து மாநிலங்களான ஹிரியானாவிற்கும், உத்தரப் பிரதேசத்திற்கும் சென்று மக்கள் டீசல் வாங்கி வருகின்றனர். இந்த நிலையை தடுக்கவே டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரி குறைக்கப்பட்டதாக ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார். இந்த விலைகுறைப்பு இம்மாதம் 20ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக்கிற்கு போட்டியாக 'கூகுள் மீ'
சோசியல் நெட்வொர்க் இணையதளங்களில், ஆரம்பித்த சில நாட்களிலேயே அசுர வளர்ச்சி பெற்றுள்ள பேஸ்புக்கிற்கு போட்டியாக, கூகுள் நிறுவனம் 'கூகுள் மீ' என்ற பெயரில் புதிய இணையதளத்தை துவக்க உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தி்த்த டிக் நிறுவனர் கெவின் ரோஸ், இந்த செய்தியை நம்ப முடியவில்லை எனினும், நம்பத்தகுந்த இடத்திலிருந்து இந்த தகவல் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். தொழில்நுட்ப இணையதளங்களான மாஷபிள் மற்றும் டெக்கிரஞ்ச் உள்ளிட்ட தளங்களும் இந்த தகவலை உறுதி செய்துள்ளன. கூகுள் நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாகவே, விரைவில் 'கூகுள் மீ' இணையதளத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதுகுறித்த ஆய்வுகள், தென் ஆப்ரிக்காவின் டப்ளின் நகரில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்று வருவதாக டெக்கிரஞ்ச் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
கூகிள், 24சதவீதம் வருமானம் அதிகரிப்பு
இணைய தள ஜாம்பவானாகிய கூகிள் தனது 2010 இரண்டாம் காலாண்டிற்கான நிதி அறிக்கையினை வெளியிட்டுள்ளது. இந்த 2ம் காலாண்டு 24 சதவிகிதம் வருமான அதிகரிப்பை தந்துள்ளதாக கூகிள் தெரிவித்துள்ளது.கூகிள் வெளியிட்டுள்ள 2ம் காலாண்டிற்கான நிதி அறிக்கையில் இருந்து பெறப்பட்ட சில முக்கிய குறிப்புக்கள் பின்வருமாறு. உழைக்கப்பட்ட வருமானம் 6820 மில்லியன் அமெரிக்க டாலர். கடந்த 2009 2ம் காலாண்டு வருமானம் 5520 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இந்த 2ம் காலாண்டில் வருமான அதிகரிப்பு 24 சதவிகிதம் காணப்படுகிறது. மொத்த சொத்துக்களின் பெறுமதி 48,045 மில்லியன் அமெரிக்க டாலர் மொத்த வருமானத்தில் 48 சதவிகிதம் அமெரிக்கவிலும் மீதி 52 சதவிகிதம் சர்வதேச ரீதீயாகவும் உழைக்கப்பட்டதாகும்.
ஆக்சிஸ் வங்கியின் நிகர லாபம் அதிகரிப்பு
இந்தியாவி்ன முன்னணி தனியார்துறை வங்கிகளுள் ஒன்றான ஆக்சிஸ் வங்கி, ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் நிகர லாபமாக ரூ. 742 கோடியை ஈட்டியுள்ளது. சென்ற ஆண்டின் முதல் காலாண்டில் நிகர லாபம் ரூ. 562.04 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே காலாண்டுகளில், இந்த வங்கியின் வட்டி வருவாய் ரூ. 2,905,96 கோடியில் இருந்து ரூ. 3,325,59 கோடியாக அதிகரித்துள்ளது. வட்டிச் செலவீனம் ரூ. 1,859,93 கோடியில் இருந்து 1,811,82 கோடியாக குறைந்துள்ளது.
இந்தியாவுடன் ஈரான் முதலீடு பாதுகாப்பு ஒப்பந்தம்
இந்தியா, ஈரான் இடையே தற்போதுள்ள இரு தரப்பு வர்த்தகத்தை அடுத்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக்க இரு தரப்பு முதலீட்டு மேம்பாட்டு ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புவதாக ஈரான் அமைச்சர் கூறியுள்ளார். புது டெல்லியில் இந்திய தொழில் வர்த்தக அமைப்புகளின் கூட்டமைப்பான ஃபிக்கி ஏற்பாடு செய்த ‘ஈரானில் முதலீட்டு வாய்ப்புகள்’ என்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய ஈரான் நாட்டு நிதியமைச்சர் முனைவர் செய்யது சம்சுதீன் உசேனி, இரு நாடுகளுக்கும் இடையே முதலீடு பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்துகொள்வது தொடர்பாக இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் தான் பேசப்போவதாகக் கூறியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு வர்த்தகம் கடந்த மூன்று ஆண்டுகளில் 60 விழுக்காடு அதிகரித்து 15 பில்லியன் டாலர்கள் அளவிற்கு உயர்ந்துள்ளது, அதனை அடுத்த 5 ஆண்டுகளில் 30 பில்லியன் டாலர்களாக உயர்த்த முதலீட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் அவசியம் என்று கூறியுள்ளார். இந்தியாவின் எரிசக்தித் தேவைகளை நிறைவு செய்ய ஈரான் தயாராக உள்ளது என்று கூறிய உசேனி, எண்ணெய், எரிவாயு, சுரங்கம், கனிமங்கள், வாகன உற்பத்தி, போக்குவரத்து, இராசாயணம், மருந்து உற்பத்தி, ஜவுளி, விவசாயம், உணவுப் பதனிடல் ஆகியவற்றில் இந்தியாவின் முதலீட்டை ஈரான் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
Subscribe to:
Comments (Atom)
