Tuesday, July 27, 2010

ரிசர்வ் வங்கியின் ரெப்போ ரேட் அதிகரிப்பு

ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் அதிகரிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி வட்டி விகித கொள்கையை இன்று வெளியிட்டது. அதில் ரெப்போ ரேட் விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தியுள்ளது. ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 0.50 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 4.50 சதவீதமாக இருக்கிறது. வங்கிகளுக்கான ரொக்க கையிருப்பு விகிதம் ( சி.ஆர்.ஆர்., ) அதே 6 சதவீதத்திலேயே இருக்கிறது. மேலும் 2010 - 2011 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.5 சதவீதமாக அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

சூரிய சக்தி மூலம் 1,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி

அடுத்த மூன்று ஆண்டுகளில், நம் நாட்டில் சூரிய சக்தி மூலம் 1,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என மத்திய மின்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்தார். இதில் 500 மெகா வாட் சூரிய வெப்பத்தின் வாயிலாகவும், மற்றொரு 500 மெகா வாட் சூரிய ஒளி வாயிலாகவும் பெறப்படும் என அவர் கூறினார். மத்திய அரசுக்கு சொந்தமான பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் மின் உற்பத்தி திட்டங்களுக்கு தேவையான நிதி உதவி வழங்கி வருகின்றன. ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் கிராமப்புறங்களில் அமைக்கப்படும் மின் உற்பத்தி திட்டங்களுக்கு கடன் வசதி அளித்து வருகிறது. இந்த இரண்டு நிறுவனங்களின் ஆதரவுடன் 2013-ஆம் ஆண்டுக்குள் 1,000 மெகா வாட் சூரிய மின் சக்தி உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

பருப்பு விலை ச‌ரிவு

உணவுப் பொருட்களை, 'ஸ்டாக்' வைத்துள்ள வியாபாரிகள் மீது, அரசு அதிரடி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பரவிய தகவலால், பருப்பு விலை சரிந்துள்ளது. பருப்பு விலையை கட்டுப்படுத்தும் விதமாக, ஆன்-லைன் வர்த்தகத்தில் இருந்து, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை மத்திய அரசு, நீக்கியது. இருந்தும், வடமாநிலங்களில் வெள்ளம் காரணமாக, விளைச்சலில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.



நவம்பர் 2009லிருந்து கடந்த வாரம் வரை, அனைத்து பருப்பு வகையிலும் நிலையில்லா தன்மையே நீடித்தது. இதனால், பெரிய வியாபாரிகளை தவிர, நடுத்தர மற்றும் சிறிய மளிகை கடை வியாபாரிகள், விற்பனைக்கு ஏற்ப பருப்பு வகைகளை கொள்முதல் செய்தனர். எதிர்க்கட்சிகளின் போராட்டம் மற்றும் தமிழகத்தில் வர இருக்கும் சட்டசபைத் தேர்தலை கருத்தில் கொண்டு, மத்திய, மாநில அரசுகள், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக, வடமாநிலம், தமிழகத்தில் அனைத்து வகையான பருப்புகளையும் இருப்பு வைத்துள்ள வியாபாரிகளை கண்காணிக்க உளவுத் துறைக்கு, மத்திய, மாநில அரசுகள், ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளன. இத்தகவல் வியாபாரிகள் மத்தியில் பரவி, இருப்பு வைத்துள்ள பருப்பு வகைகளை விற்பனைக்கு அனுப்ப துவங்கி விட்டனர். வடமாநிலங்களில் இருந்தும் தமிழகத்துக்கு பருப்பு வரத்து, திடீர் என அதிகரித்துள்ளதால், விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.



கடந்த வாரம், துவரம் பருப்பு மொத்த விலையில் குவிண்டால் 7,600 ரூபாய்க்கு விற்றது, நேற்று 6,950 ரூபாய்க்கும், 9,800 ரூபாய்க்கு விற்ற பாசி பருப்பு, 8,400 ரூபாய்க்கும் விற்கிறது. மேலும் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். துவரம் பருப்பு, பாசி பருப்பின் விலை சரிவடைந்த நிலையில், உளுந்தம் பருப்பின் விலையில் மாற்றமில்லை. இச்சரிவு மேலும் தொடரும் என்பதால், வியாபாரிகள் மத்தியில் கடும் கிலியை ஏற்படுத்தியுள்ளது.