Saturday, July 17, 2010

விளைச்சல் குறைவால் மாம்ப‌ழ‌ விவ‌சாய‌ம் ந‌ஷ்ட‌ம்

வத்திராயிருப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான மாம்பழ சீசன் கடந்த வாரத்துடன் முழுமையாக முடிவடைந்தது. எதிர்பார்த்த விளைச்சல் இல்லாததால் அனேக இடங்களில் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது.

ராஜபாளையம், ஸ்ரீவி., வத்திராயிருப்பு பகுதிகளில் 15,000 ஏக்கருக்கு மேல் மாம்பழ‌ விவசாயம் நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் துவங்கி ஜூன் வரை மூன்று மாதங்கள் மாம்பழ சீசன் களைகட்டும்.



கடந்தாண்டு பருவமழை சரிவர பெய்யாததால் இந்த ஆண்டு சீசனில் வெயில் அதிகரித்து மாமரங்களில் பூத்த பூக்கள் எல்லாம் உதிர்ந்தன. வறட்சி நிலவியதால் மரங்களுக்கு நீர்பாய்ச்சவும் வழியின்றி போனது.உதிர்ந்த வடுக்கள்: இதன் காரணமாக இந்தாண்டு மாம்பழ சீசன் மந்தமாக துவங்கியது. சீசன் துவங்கிய பிறகு இடையிடையே சிறிது சாரல் மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைந்து ஒருசில பகுதிகளில் மரங்களில் புதிய பூக்கள் பூக்க துவங்கியது. பூத்தவையும் உதிரவில்லை. மே மாதம் ஒரளவு விளைச்சல் அதிகரித்தது. ஆனால் அதுவும் கடும் வெயிலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் வடுக்களிலேயே உதிர்ந்தது. தாமதமாக பூத்த பூக்களில் ஒருசில இடங்களில் விவசாயிகள் தண்ணீரை தெளித்து மரங்களுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தி பூக்களை வெப்பத்திலிருந்து பாதுகாத்ததால் நஷ்டத்திலிருந்து தங்களை காத்துக்கொண்டனர்.விவசாயிகள் ஏமாற்றம்: மற்ற அனைத்து பகுதிகளிலும் விவசாயிகளுக்கு நஷ்டமே ஏற்பட்டது. வழக்கமாக ஜூன் மாதம் முடிய வேண்டிய சீசன் இந்தாண்டு இடையே தாமதமாக பூத்த பூக்களால் ஜூலை வரை நீடித்தது. அங்கொன்றும் இங் கொன்றுமாக காய்த்த காய்கள் அனைத்தும் கடந்த வாரத்துடன் முழுமையாக பறிக்கப் பட்டன.சொந்த நிலங்களில் விவசாயம் செய்பவர்களை தவிர குத்தகை எடுத்து விவசாயம் செய்தவர்களுக்கும் மற்ற விவசாயிகளுக்கும் எதிர் பார்த்த விளைச்சல் இல்லாததால் நஷ்டமே ஏற்பட்டது. இந்தாண்டு சீசன், நஷ்டத்துடன் முடிவடைந்ததால் விவசாயிகள் வருத்தத்தில் உள்ளனர்.

No comments:

Post a Comment