நடப்பு நிதி ஆண்டில் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி 4,000 கோடி டாலர் (சுமார் ரூ.1.80 லட்சம் கோடி) மதிப்பிற்கு உயரும் என பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் மதிப்பீடு செய்துள்ளது. இது, சென்ற நிதி ஆண்டில் 3,270 கோடி டாலராக இருந்தது. ஆக, நடப்பாண்டில் இச்சாதனங்கள் ஏற்றுமதி 20 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2008-09-ஆம் நிதி ஆண்டில் நாட்டின் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி 4,050 கோடி டாலராக இருந்தது. இந்நிலையில், உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், சென்ற 2009-10-ஆம் நிதி ஆண்டில், பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி, அதற்கு முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது 19 சதவீதம் சரிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற ஜுன் மாதத்தில் நம் நாட்டின் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி, சென்ற ஆண்டின் ஜுன் மாதத்தை விட, 90 சதவீதம் உயர்ந்து 510 கோடி டாலராக உயர்ந்துள்ளது. சென்ற மாதத்தில் நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 30.4 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
Monday, August 16, 2010
அரசு மானியம் கிடைக்காததால் கதர் விற்பனை மந்தம்
சுதந்திர தின விழாவையொட்டி காதி பொருட்களுக்கு அரசின் தள்ளுபடி சலுகை வழங்காததால் கதர் விற்பனையில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 80க்கும் மேற்பட்ட சர்வோதய சங்கங்கள் மூலம் 10 ஆயிரம் சர்வோதயா நிறுவனங்கள், காதி பவன்கள் செயல்பட்டு வருகின்றன. சர்வோதயா நிறுவனங்களில் காமராஜர், அண்ணாதுரை, பெரியார், இந்திரா பிறந்த நாள் விழாக்கள், தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் பண்டிகைகள் என ஆண்டுக்கு 90 நாட்களில் கதர், பாலி வஸ்திரா, கம்பளி துணி களுக்கு 30 சதவீதம், பட்டுக்கு 20 சதவீதமும் தள்ளுபடி வழங்கப்படுவது வழக்கம். தள்ளுபடி தொகையை சம்மந்தப்பட்ட சர்வோதயா சங்கங்களுக்கு மத்திய அரசு 20 சதவீதம், மாநில அரசு 10 சதவீதம் மானியமாக வழங்கி விடும். இதனால் கதர் பொருட் களை பயன்படுத்துவோர், சலுகை நாட்களில் அதிகளவில் பொருட்களை வாங்கி வந்தனர். இந்நிலையில் மத்திய அரசின் 12வது நிதி கமிஷனின் புதிய உத்தரவால் காதி பொருட்கள் விற்பனைக்கு தள்ளுபடி இல்லை. இம்மானியத்தை நுõற்போர், நெய்வோர்களுக்கு வழங்கும் வகையில் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதனால் சர்வோதயா சங்கங்கள் இந்த ஆண்டு முதல் தள்ளுபடி சலுகை வழங்க முடியவில்லை. ஒவ்வொரு சுதந்திர தினவிழாவிற்கும் காதி பொருட்களுக்கு தள்ளுபடி சலுகை கிடைத்தது. கால மாற்றத்திற்கு ஏற்ப ஜவுளி நிறுவனங்கள் வித, விதமாக துணிகளை குறைந்த விலையில் விற்பனை செய்து வரும் நிலையில் இவற்றுடன் போட்டி போட முடியாமல் சர்வோதய சங்கங்கள் தள்ளாடி வருகின்றன.
இந்நிலையில் முக்கிய நாட்களுக்கு தள்ளுபடி சலுகை வழங்காததால் ஏற்கனவே காதி பொருட்கள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களையும் இழக்க நேரிடுகிறது. இதனால் காதிபவன்களில் கதர் உள்ளிட்ட இதர பொருட்கள் விற்பனை பெருமளவில் குறைந்துள்ளது. மத்திய அரசு புதிதாக அறிவித்த தள்ளுபடி மானியம் நெசவாளர்களுக்கும் முறையாக சென்றடையவில்லை. காதிப்பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கும் மானியம் இல்லை. வழக்கம் போல் தள்ளுபடி சலுகை வழங்கினால்தான் கதர் ஆடை உடுத்துபவர்களை தக்க வைத்து கொள்ள முடியும் என காதி விற்பனையாளர்கள் கருதுகின்றனர்.
மாருதி சுசுகி புதிய சாதனை
மாருதி சுசுகி நிறுவனம், இயற்கை எரிவாயு தொழில்நுட்பம் மூலம் இயங்கும் புதிய ரக கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்தில், மாருதி சுசுகி நிறுவனத்தின் இயற்கை எரிவாயு தொழில்நுட்பம் (சி.என்.ஜி.,) மூலம் இயங்கும் கார்களை, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிமுகப்படுத்தி வைத்தார். இவ்விழாவில், மாருதி குழும அதிகாரிகள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இயற்கை எரிவாயு தொழில்நுட்பம், மாருதியின் எஸ்.எக்ஸ்.4, எக்கோ, வேகன் ஆர், எஸ்டிலோ மற்றும் ஆல்டோ ஆகிய கார்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வகைக் கார் இன்ஜின்களில் 'இன்டெலிஜன்ட்- கேஸ் போர்ட் இன்ஜெக்ஷன்' என்ற புதிய தொழில்நுட்பமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புரோக்கர்களுக்கு 'செபி' எச்சரிக்கை
முதலீட்டாளர்களின் வர்த்தக் கணக்குளில் இருந்து பணத்தை புரோக்கர்கள் தவறுதலாக பயன்படுத்துவதை தவிர்ப்பதற்காக, ஒவ்வொரு மாதமோ அல்லது காலாண்டிலோ, முதலீட்டாளர்களின் பயன்படுத்தாத பணத்தை திருப்பியளித்து விடவேண்டும் என்று 'செபி' எச்சரித்துள்ளது. முதலீட்டாளர்களின் வர்த்தகக் கணக்குகளில் இருந்து, புரோக்கர்கள், பங்குச் சந்தை நிலவரத்தை பொருத்து முதலீடு செய்வர். ஆனால், முதலீடு செய்தது போக மிச்சமுள்ள பணத்தை தவறுதலாக கையாள்வதாக புகார்கள் வந்தன.
இதையடுத்து, 'செபி' பங்குச் சந்தை புரோக்கர்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்களின் தேர்வுப்படி, ஒவ்வொரு மாதமோ அல்லது காலாண்டிலோ, வாடிக்கையாளர்களின் பயன்படுத்தப்படாத பணம் உள்ளிட்ட அவர்களின் மொத்த வர்த்தகக் கணக்கையும் வாடிக்கையாளர்களிடம் கொடுத்து விட வேண்டும். வர்த்தகக் கணக்குடன் கணினி மூலம் இணைக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் இனி புரோக்கர்கள் மிச்சமுள்ள பணத்தைச் செலுத்தி விட வேண்டும். இ-பேங்கிங் வசதி இல்லாத வாடிக்கையாளர்களுக்கு 'செக்' மூலம் பணத்தை அனுப்பி விட வேண்டும். இதன் மூலம், புரோக்கர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இடையிலான பரிவர்த்தனையில் வெளிப்படைத் தன்மை ஏற்படும். மேலும் முதலீட்டாளர்களின் பணம் தவறான வழியில் பயன்படுத்தப்படுவதும் தடுக்கப்படும்.
வட்டி உயர்வு குறித்து ஸ்டேட் பாங்க் விரைவில் அறிவிப்பு
"முதன்மைக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவது குறித்து, பாரத ஸ்டேட் வங்கி இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு செய்யும்" என்று அந்த வங்கியின் தலைவர் ஓ.பி.பட் தெரிவித்துள்ளார். பாரத ஸ்டேட் வங்கி தலைவர் ஓ.பி.பட் இது குறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: வங்கியின் சொத்துக் கடன்களுக்கான கமிட்டி (அல்கோ) இன்னும் ஓரிரு நாட்களில் கூடும். வங்கியின் காலாண்டு அறிக்கை வெளிவந்துள்ள இந்நிலையில், வட்டி விகிதங்களை உயர்த்துவது குறித்து ஆலோசிப்போம். அனைத்து வங்கிகளும் தங்கள் வைப்பு நிதி மற்றும் முதன்மைக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்து விட்டன. அதனால் 0.25 சதவீதம் முதன்மைக் கடன்களுக்கான வட்டியை அதிகரிப்பது குறித்து விரைவில் முடிவு செய்வோம்' என்று அவர் தெரிவித்தார். சமீபத்தில் பஞ்சாப் தேசிய வங்கி, பரோடா வங்கி, பாங்க் ஆப் இந்தியா, ஓரியன்டல் பாங்க் ஆப் காமர்ஸ் மற்றும் கனரா வங்கி ஆகியவை தங்கள் முதன்மைக் கடன்களுக்கான வட்டியை 0.50 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வர்த்தகக் கூட்டமைப்பு பரிந்துரை
"உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 8 சதவீதத்தை எட்ட வேண்டுமானால், தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்" என்று, தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் கூட்டமைப்பு (எப்.ஐ.சி.சி.ஐ) கூறியுள்ளது. தற்போது இந்தியாவில், அமைப்பு சாரா துறைகளையும் சேர்த்து, மொத்தம் 45 கோடியே 70 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். 2022க்குள் இந்தியா, 8 சதவீத உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை எட்ட வேண்டும் என்று, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த இலக்கை அடைய 50 கோடி திறன் மேம்பாடுடைய பணியாளர்கள் இந்தியாவுக்குத் தேவை. இத்தேவையை எதிர்கொள்வதற்கு, எப்.ஐ.சி.சி.ஐ, சில ஆலோசனைகளைக் கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டுவதற்குத் தேவையான 50 கோடி பணியாளர்களை உருவாக்க தேவையான சில நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். தற்போது ஒவ்வொரு ஆண்டும், திறன் மேம்பாடு உடைய பணியாளர்கள் 34 லட்சம் பேர் மட்டுமே பணியில் சேர்கின்றனர். இந்த எண்ணிக்கை ஒரு கோடியே 50 லட்சத்தை எட்ட வேண்டும். அதற்கு திறன் மேம்பாடு மற்றும் தொழிற்கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வாகன உதிரிபாகங்கள், ரியல் எஸ்டேட், சுகாதாரத் துறை, ஜவுளித் துறை, மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் பொருளாதார வளர்ச்சியிலும், கணிசமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் முக்கிய பங்காற்றும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலக்கரியிலிருந்து வாயு எடுக்க கோல் இந்தியா புதிய முயற்சி
மத்திய அரசின், 'நவரத்னா' அந்தஸ்து பெற்ற பொதுத் துறை நிறுவனமான 'கோல் இந்தியா' (சி.ஐ.எல்.,) நிறுவனம், நிலக்கரியிலிருந்து வாயு எடுக்கும் திட்டத்தை இரண்டு பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து ஒரிசா மாநிலத்தில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. நிலக்கரியிலிருந்து வாயு எடுக்கும் திட்டம், ஒரிசா மாநிலம் தல்சார் என்ற இடத்தில் செயல்படுத்தப்பட இருக்கிறது. இத்திட்டத்தில், 'கேஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா' மற்றும் 'ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் மற்றும் பெர்டிலைசர்ஸ்' என்ற பொதுத் துறை நிறுவனங்களோடு இணைந்து சி.ஐ.எல்., செயல்படத் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சி.ஐ.எல்., சேர்மன் எஸ்.பட்டாச்சார்யா கூறியதாவது: தல்சாரில் தற்போது இயங்காமல் இருக்கும் ஆர்.சி.எப்., நிறுவனத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்துக்கு 'மகாநதி கோல்பீல்ட்ஸ்' நிறுவனம், 50 லட்சம் டன் நிலக்கரியை அளிக்க ஒப்புக் கொண்டுள்ளது. சி.ஐ.எல்., ஏற்கனவே இத்திட்டத்தை பூமிக்கடியில் செயல்படுத்தியது. ஆனால், ரஷ்யாவில் மக்கள் வசிக்காத உள்ளடங்கிய பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதைப் போல் அல்லாமல், நம் நாட்டில் மக்கள் வசிக்கும் இடங்களிலேயே செயல்படுத்த வேண்டியிருப்பதால், நீர் விரைவில் மாசுபட்டு விடுகிறது. நிலக்கரியிலிருந்து எடுக்கப்படும் அமோனியம் நைட்ரேட்டிலிருந்து தான் யூரியா உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது என்று தெரிவித்தார். தற்போது நிலக்கரித் துறையில் 7 சதவீதம் வரை வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பட்டாச்சார்யா தெரிவித்தார். நிலக்கரியிலிருந்து பிரித்தெடுக்கப்படும் வாயு, தொழிற்சாலைகளுக்குப் பயன்படும்.
Friday, August 6, 2010
எஸ்பிஐ-யில் புதிதாக 5,000 முகவர்கள்
தனியார் துறையைச் சேர்ந்த எஸ்.பீ.ஐ. லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் ஆயுள் காப்பீட்டு வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. சிறப்பான செயல்பாட்டை கண்டு வரும் இந்நிறுவனம் அதன் ஒருங்கிணைப்பு சேவையை விரிவுபடுத்தும் வகையில் இவ்வாண்டு கூடுதலாக 20-25 கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளது. மேலும் புதிதாக 5,000 முகவர்களை பணியில் சேர்த்துக் கொள்ள முடிவு செய்துள்ளது. இதனையடுத்து இந்நிறுவனத்தின் முகவர்களின் எண்ணிக்கை தற்போதைய 70,000 -ல் இருந்து 75,000-ஆக அதிகரிக்கும் என இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான எம்.என். ராவ் தெரிவித்தார். எஸ்.பீ.ஐ. லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் சென்ற ஜுன் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில் ரூ.114 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டை விட 195 சதவீதம் அதிகமாகும். இதே காலாண்டுகளில் இந்நிறுவனத்தின் மொத்த பிரிமிய வருவாய் 9.5 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.1,707 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் புதிய பிரிமியம் வாயிலான வருவாய் ரூ.976 கோடியாகும். குழும காப்பீடு வாயிலான வர்த்தகம் சுணக்கம் கண்டதையடுத்து புதிய பிரிமிய வருவாய் வளர்ச்சி சற்று குறைந்துள்ளது. நிறுவனத்தின் செலவினம் இத்துறையில் ஈடுபட்டு வரும் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாக உள்ளது. எனவே செலவினங்களை குறைக்க வேண்டிய அவசியமில்லை என ராவ் குறிப்பிட்டார். எஸ்.பீ.ஐ. லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்பு ரூ.1,350 கோடியாக உள்ளது. இதில் அளிக்கப்பட்ட பங்கு மூலதனம் ரூ.1,000 கோடியாகும். இது தவிர லாபத்திலிருந்து ரூ.350 கோடி ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. எனவே நிறுவனத்தின் நிகர மதிப்பு நல்ல அளவில் உள்ளதால் புதிதாக மூலதனம் இட வேண்டிய அவசியமில்லை என ராவ் தெரிவித்தார்.
கச்சா எண்ணெய் உற்பத்தி 7 சதவீதம் உயர வாய்ப்பு
நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தி 3.60 கோடி டன்னுக்கு அதிகமாக இருக்கும் என பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் கவுன்சில் தெரிவித்துள்ளது. இது, 7 சதவீத வளர்ச்சியாக இருக்கும் என்றாலும், சென்ற நிதி ஆண்டுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கை (3.80 கோடி டன்) விட குறைவானது. அடுத்த சில ஆண்டுகளுக்கு உள்நாட்டில் கச்சா எண்ணெய் உற்பத்தி சற்றே மந்தமடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2008-09-ஆம் நிதி ஆண்டில் உற்பத்தி 1.8 சதவீதம் குறைந்தது. சென்ற நிதி ஆண்டில் இது 0.5 சதவீதம் என்ற அளவில் மிக குறைவான வளர்ச்சி கண்டது. அவ்வாண்டில் மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தி 3.37 கோடி டன்னாக இருந்தது. இதனையடுத்து 3.80 கோடி டன் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற இலக்கு எட்டப்படவில்லை. கெய்ரன் நிறுவனத்தின் பார்மர் எண்ணெய் வயலில் (ராஜஸ்தான்) உற்பத்தி தாமதம் ஆனதே இதற்கு முக்கிய காரணமாகும். நடப்பு நிதி ஆண்டில் நிலக்கரி, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி நடவடிக்கைகளை உள்ளடக்கிய சுரங்கத் துறை 8 சதவீதம் வளர்ச்சி காணும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தங்கம் விலை மீண்டும் உயர்வு ஏன்?
பருவ மழையும், காலாண்டு முடிவுகளும் சந்தைக்கு சாதகமாக இருக்கின்றன. ஆகவே, சந்தையும் முதலீட்டாளர்களை ஏமாற்றவில்லை. 18,000 என்ற தடையை தாண்டி சந்தை ஜோராக போய்க்கொண்டிருக்கிறது. திங்களன்று, 212 புள்ளிகளும், செவ்வாய், 34 புள்ளிகளும் கூடியிருந்தது. புதனன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை, 102 புள்ளிகள் கூடி, 18,217 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை, 28 புள்ளிகள் கூடி, 5,467 புள்ளிகளுடனும் முடிந்தது. வங்கிப் பங்குகள் சந்தை ஏறுவதற்கு பெரிய உறுதுணையாக இருந்தன. குறைந்து வரும் மியூச்சுவல் பண்டு
முதலீடுகள்: ஜூலையில் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடுகள் 11,000 கோடி ரூபாய் குறைந்துள்ளது. நிறைய முதலீட்டாளர்கள் பணம் எடுத்தது தான் காரணம். தற்போது எல்லா மியூச்சுவல் பண்டுகளிலும் சேர்த்து, 6,66,667 கோடி ரூபாய் உள்ளது. பெரிய மாற்றங்கள் இல்லையென்றாலும் முதலீட்டாளர்கள் லாபம் பார்த்ததாலும் குறைந்திருக்க வாய்ப்பு உண்டு.
கூடிவரும் டிபாசிட் வட்டி விகிதங்கள்: வரும் வாரங்களில் டிபாசிட் வட்டி விகிதங்கள் கூடும், அது டிபாசிட்டர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும் என்று கூறியிருந்தோம். அதன்படியே பல வங்கிகள் தங்களது வட்டி விகிதங்களை கூட்டி உள்ளன. ஐந்தாண்டு டிபாசிட்டுக்கு தற்போது 8 சதவீதம் வரை கிடைக்கிறது. மூத்த குடிமகன்களுக்கு 0.5 சதவீதம் வட்டி கூடுதலாக கிடைக்கும். இன்னும் சிறிது கூடவும் வாய்ப்பு உண்டு. ரிசர்வ் வங்கியின் அடுத்த அறிவிப்புகளை வைத்து வட்டி விகிதங்கள் கூடலாம்.
காலாண்டு முடிவுகள்: என்.எம்.டி.சி., கெயில், ஹிண்டால்கோ ஆகிய கம்பெனிகள் நல்ல முடிவுகளை தந்துள்ளன. அதானி வாங்கிய ஆஸ்திரேலிய கம்பெனி: பல துறைகளில் இருந்து வரும் அதானி குழுமம் ஆஸ்திரேலியாவின் நிலக்கரி சுரங்கம் ஒன்றை, 12,600 கோடி ரூபாய்க்கு வாங்கவுள்ளது. அதானி பவர் நிறுவனத்திற்கு தொடர்ந்து எரிபொருள் கொடுக்க இந்த சுரங்கம் வழிசெய்யும்.
தங்கம் ஏன் சிறிது கூடியது? சீனாவில் வங்கிகள் தங்கம் இறக்குமதி, ஏற்றுமதி செய்ய உள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்ற செய்தி வந்ததை அடுத்து தங்கம் விலை சிறிது கூட ஆரம்பித்தது. மேலும், இந்திய வணிகர்கள், தங்கம் விலை குறைந்துள்ளதால் வாங்கவும் ஆரம்பித்தனர். இது சந்தையில் தங்கத்தின் விலையை கூட்டியது.
டாலர் ரூபாய்: டாலருக்கு எதிரான ரூபாய் வலுப்பெற்று வருகிறது. 46 ரூபாய்க்கு அருகே வந்து விட்டது. மறுபடி ஏற்றுமதியாளர்களுக்கு கவலையளிக்கக் கூடிய தருணங்கள் தான். இப்படி மாறி மாறி மேலும் கீழும் இருப்பதால் ஏற்றுமதியாளர்களாலும் சரிவர கணிக்க இயலவில்லை.
ஏன் ரூபாய் வலு பெற்றது? இந்தியாவிற்குள் வெளிநாட்டுப் பணவரத்து அதிகமாக உள்ளது. இது சந்தையில் டாலரை வலுவிழக்க செய்கிறது. அதே சமயம் ஜூன் மாத ஏற்றுமதி கடந்தாண்டு ஜூன் மாத ஏற்றுமதியை விட, 30 சதவீதம் கூடுதலாக உள்ளது. இந்த ஜூனில் 17.74 பில்லியன் டாலர்கள் ஏற்றுமதி செய்துள்ளோம்.
புதிய வெளியீடுகள்: பஜாஜ் கம்பெனியின் ஒரு அங்கமான பஜாஜ் கார்ப் (அல்மாண்ட் ஆயில் தயாரிப்பாளர்கள்) தங்களது புதிய வெளியீட்டை கொண்டு வந்துள்ளது. இன்று வரை இருக்கும். விலை ரூபாய் 630 முதல் 660 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பஜாஜ் கம்பெனி என்பதால் சிறிது ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் போடலாம்.
இது தவிர இன்ஜினியர்ஸ் இந்தியா தனது வெளியீட்டின் விலையை ரூபாய் 290 என்றும், எஸ்.கே.எஸ்., மைக்ரோ பைனான்ஸ் தன் வெளியீட்டின் விலையை 985 ரூபாய் என்றும் நிர்ணயித்துள்ளது. சிறிய முதலீட்டாளர்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடியில் கிடைக்கும். பட்டியலிடப்படும் போது இரண்டு கம்பெனிகளும் லாபத்தில் பட்டியலிடப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
வரும் நாட்கள் எப்படி இருக்கும்? சந்தை ஜம்மென 18,000த்தை தாண்டி விட்டது. இந்நிலையில் நிலைத்து நிற்க வாய்ப்புகள் உண்டு. வெளிநாட்டுப் பணம் சந்தைக்குள் வருவதால் சந்தை பெரிய இறக்கங்களை சந்திக்க வாய்ப்பில்லை.
ஹுண்டாய் தொழிற்சாலையின் அபார வளர்ச்சி
''சென்னை தொழிற்சாலையில் 12 ஆண்டுகளில் 30 லட்சம் கார்கள் தயாரித்து சாதனை படைத்துள்ளோம்' என்று ஹுண்டாய் நிர்வாக இயக்குனர் பார்க் தெரிவித்தார்.
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டை ஹுண்டாய் கார் தொழிற்சாலையில் 30 லட்சமாவது கார் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. தொழிற்சாலை உற்பத்திப் பிரிவு துணைத் தலைவர் சேதுராமன் தலைமை தாங்கினார். மார்க்கெட்டிங் பிரிவு துணைத் தலைவர் அரவிந்த் சக்சேனா முன்னிலை வகித்தார். நிர்வாக இயக்குனர் எச். டபிள்யூ பார்க், 30 லட்சமாவது காரை கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, ஹுண்டாய் கார் தொழிற்சாலை 1996ம் ஆண்டு பூமி பூஜை போடப்பட்டு கட்டப்பட்டது. 1998ம் ஆண்டு சிறிய ரக சான்ரோ கார்கள் உற்பத்தி செய்யப்பட்டன. 2000ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முடிய ஒரு லட்சம் கார்கள், 2001ம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டு லட்சம், 2003ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்து லட்சம் என படிப்படியாக உயர்ந்து, மார்ச் 2006ம் ஆண்டு 10 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டன. 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 20 லட்சம் கார்களை தயாரித்தோம். 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 லட்சமாவது காரை உற்பத்தி செய்து சாதனை புரிந்துள்ளோம்.
இங்கு உற்பத்தியாகும் கார்களில் 48 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஹுண்டாய் நிறுவனம் இந்திய அளவில் கார் உற்பத்தியில் இரண்டாமிடத்தில் உள்ளது. இந்திய சாலைகளுக்கு ஏற்றவாறு கார் தயாரிக்கப்படுகிறது. ஹுண்டாய் நிறுவனத்தில் கார்களுக்கான பராமரிப்பு உத்தரவாதத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு மூன்று ஆண்டுகள் அல்லது 50 ஆயிரம் கி.மீ., வரையில் பராமரிப்பு செலவு வாடிக்கையாளர்களுக்கு இல்லை. மோட்டார் உத்தரவாத திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் 294 விற்பனை மையங்கள் உள்ளன. 586 சர்வீஸ் சென்டர் மூலம் வாடிக்கையாளர்களின் கார்களை பராமரித்து வருகிறோம். இவ்வாறு பார்க் தெரிவித்தார். பொது மேலாளர் ரமேஷ், முதன்மை பாதுகாப்பு அலுவலர் நாராயணன், மக்கள் தொடர்பு அலுவலர்கள் ஸ்ரீதர், சத்தியசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.
வர்த்தகம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி கோர்ட்
''வர்த்தக கோர்ட்டுகளை துவக்குவதற்கான மசோதா, பார்லிமென்டின் நடப்பு கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்படும்,'' என மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார். மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் கூறியதாவது: ஐந்து கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேலான தொகை சார்ந்த, வர்த்தகம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு கோர்ட்டுகள் அமைக்கப்படும். இதற்காக, 'ஐகோர்ட்டுகளின் வர்த்தகப் பிரிவு மசோதா 2009' பார்லிமென்டின் நடப்பு கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்படும். இந்த வர்த்தக கோர்ட்டுகள் எல்லாம் ஐகோர்ட்டுகளின் டிவிஷன் பெஞ்சாக செயல்படும். கடந்த 1991ம் ஆண்டிலேயே பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டு விட்டது. ஆனால், வர்த்தக ரீதியான தகராறுகளைத் தீர்ப்பதற்கான நிறுவனங்கள் திறக்கப்படவில்லை. இந்தியாவில் சட்ட ரீதியாக பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் எனில், நிறைய கால அவகாசமாகும் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. அந்த நிலைமை மாற்றப்பட வேண்டும். ஐகோர்ட்டுகள் வர்த்தகப் பிரிவு மசோதா 2009 நிறைவேறினால், வழக்கு விவகாரங்களில் புதிய சகாப்தம் உருவாகும். கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அடுத்த நான்கு ஆண்டுகளில், எந்த வழக்கும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் தேங்கி நிற்காத நிலைமை உருவாக்கப்படும். 'நாட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்க்க 300 ஆண்டுகளுக்கு மேலாகும்' என, அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி ஒருவர் கூறியுள்ளார். இது, நம்பிக்கை இல்லாத மனப்பான்மையைக் காட்டுகிறது. பிரச்னைகளை எதிர்கொள்ளாமல் அதிலிருந்து ஓடுவது போன்றதாகும். இவ்வாறு மொய்லி கூறினார்.
மொபைல்போன்களுக்கான ஆன்டி வைரஸ் சொல்யூசன்ஸ்
மொபைல் போன்களுக்கான ஆன்டி வைரஸ் சொல்யூசனை இன்னும் 12 மாதங்களில் அறிமுகம் செய்ய உள்ளதாக மேக்ஸ் செக்யூர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களைச் சந்தித்த மேக்ஸ் செக்யூர் சாப்ட்வேர்ஸ் நிறுவன நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சஞ்சய் பிரதான் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது : மொபைல்போன் உபயோகிப்பாளர்கள் இதுவரை, தங்கள் மொபைல் போன்களை கம்ப்யூட்டரின் துணையுடன் ஆன்டிவைரஸ் சாப்டவேரின் உதவியுடன் ஸ்கேன் செய்து வந்ததாகவும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு, இன்னும் 12 மாதங்களில் மொபைல் போன்கள் தங்களுக்குள்ளேயே ஸ்கேன் செய்யும் அளவிற்கு ஆன்டி வைரஸ் சொல்யூசனகளை அறிமுகம் செய்ய இருப்பதாகவும், நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதன்படி, இந்த நிதியாண்டில் 100 பேரை புதிதாக பணியமர்த்த உள்ளதாக சஞ்சய் பிரதான் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
எஸ்டிடி அழைப்பு இனி நிமிடத்திற்கு 30 பைசா மட்டும்
இந்தியாவின் முன்னணி தனியார் தொலை தொடர்பு நிறுவனமான டாடா டெலிசர்வீஸ் நிறுவனம், எஸ்டிடி அழைப்புகள் நிமிடத்திற்கு 30 பைசாவும், லோக்கல் அழைப்புகள் நிமிடத்திற்கு 50 பைசா எனும் புதிய டாரீப் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அல்ட்ரா பிளான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய திட்டத்தைப் பெற, ப்ரீபெய்டு உபயோகிப்பாளர்கள், ரூ. 58 மற்றும் ரூ. 104 ரீசார்ஜ் செய்வதன் மூலம், 3 மாதத்திற்கு இந்த பயனை அனுபவிக்கலாம் என்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Wednesday, August 4, 2010
சச்சினின் புதிய சாதனை
டெஸ்ட் அரங்கில் அதிக போட்டிகளில் விளையாடி, புதிய சாதனை படைத்தார் இந்தியாவின் சச்சின். இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 வது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடக்கிறது. இது டெஸ்ட் அரங்கில் சச்சின் பங்கேற்கும், 169 வது போட்டியாகும். இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வாக் (168 வது போட்டி) சாதனையை தகர்த்தார் சச்சின். புதிய சாதனை படைத்துள்ள இவர், டெஸ்ட் கிரிக் கெட்டின் போக்கு, வெகுவாக மாறி விட்டது என்றார்.
இது குறித்து சச்சின் கூறியது: நான் கிரிக்கெட் அரங்கில் காலடி வைத்த 20 ஆண்டுகளில், டெஸ்ட் கிரிக்கெட் பல்வேறு மாற்றங்கள் அடைந்து உள்ளது. ஒரு நாள் போட்டிகளின் தன்மையும் மாறி விட்டது. "டுவென்டி-20' போட்டிகளின் வரவுக்குப் பின், டெஸ்ட் போட்டிகளும் அதிரடிக்கு மாறி விட்டன. கடந்த 1989 ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய போது, முன்னணி பவுலர் களான வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், இம்ரான் கான், அப்துல் காதிர் ஆகியோரது பந்து வீச்சை எதிர்கொண்டது சற்று வித்தியாசமாக இருந்தது. இது தான் எனது முதல் மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும் என மனதில் நினைத்தேன். ஆனால் அடுத்த போட்டியில், சிறப்பாக ஆடி ரன் குவித்தேன். அதற்குப் பின் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது.
மிகப்பெரிய கவுரவம்: "சச்சின் என்னைப் போலவே பேட்டிங் செய்கிறார்,'என ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேன் தெரிவித்ததை, கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப் பெரிய கவுரவமாக கருதுகிறேன். அதற்குப் பின் பிராட்மேன் தேர்வு செய்த உலக லெவன் வீரர்கள் பட்டியலில் என்னையும் இணைத்தது, புதிய உற்சாகத்தை அளித்தது. ஒரு விளையாட்டு வீரருக்கு, தலைசிறந்த வீரர்களின் பாராட்டு தன்னம்பிக்கை கொடுக்கும். இவ்வாறு சச்சின் தெரிவித்தார்.
தகர்க்க முடியாது: சைமண்ட்ஸ்: அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சினின் சாதனையை இனி யாரும் தகர்க்க முடியாது என்றார் ஆஸ்திரேலியாவின் சைமண்ட்ஸ். இது குறித்து அவர் கூறுகையில், "" சச்சினின் சாதனை பாராட்டுக்குரியது. அவரது சாதனையை இனி யாரும் நெருங்க முடியாது என நினைக்கிறேன். தற்போது கிரிக்கெட் விளையாடத் துவங்கி உள்ளவர்கள், இனி 160 முதல் 170 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பார்களா என்பது சந்தேகம் தான்,'' என்றார்.
பேங்க் ஆப் பரோடாவின் நிகரலாபம் ரூ.859 கோடி
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா, நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.859.16 கோடியை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.685.38 கோடியாக இருந்தது. இதே காலாண்டுகளில், வங்கியின் வட்டி வருவாய் ரூ.4,032.11 கோடியிலிருந்து ரூ.4,726.96 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது. வட்டிச் செலவினம் ரூ.2,827.41 கோடியிலிருந்து ரூ.2,868.97 கோடியாக அதிகரித்துள்ளது.
ஷிப்பிங் கார்ப்பரேஷன்ஸின் இரண்டாவது பங்குகள் வெளியீடு
இந்தியாவின் முன்னணி பொதுத் துறை நிறுவனமான ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (எஸ்.சி.ஐ) நிறுவனம், நடப்பு நிதி ஆண்டு இறுதிக்குள் இரண்டாவது பங்கு வெளியீட்டை மேற் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டாவது பங்கு வெளியீட்டில், இந்நிறு வனத்தில் மத்திய அரசு கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில் 10 சதவீத பங்கு களுடன், புதிய பங்குகளும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரக்கு கப்பல்கள் சேவையில் ஈடுபட்டு வரும் எஸ்.சி.ஐ. நிறுவனத்தில், மத்திய அரசு தற்பொழுது 80.12 சதவீத பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளது. இது தவிர, 10 சதவீதத்திற்கும் மேலான பங்குகள் எல்.ஐ.சி. நிறுவனத்திடமும், மீதமுள்ள 3.15 சதவீத பங்குகள் பொதுமக்கள் வசமும் உள்ளன. மத்திய அரசு, அதன் நிதி பற்றாக்குறையை குறைத்துக் கொள்ளும் வகையில், நடப்பு நிதி ஆண்டில், பொதுத் துறை நிறுவனங்களில் கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில் குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் வாயிலாக ரூ.40,000 கோடியை திரட்ட திட்டமிட்டுள்ளது. இவ்வகையில், எஸ்.சி.ஐ. நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை இந்த நிதி ஆண்டின் இறுதிக்குள் இரண்டாவது பங்கு வெளியீட்டின் மூலம் விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் எஸ்.சி.ஐ.யின் இரண்டாவது பங்கு வெளியீட்டிற்கு ஒப்புதல் வேண்டி, மத்திய அமைச்சரவை குழுவின் அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. இந்த நிலையில், சென்ற ஜுன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், இந்நிறுவனம் ரூ.191 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.120 கோடியாக இருந்தது. இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.883 கோடியிலிருந்து ரூ.907 கோடியாக அதிகரித்துள்ளது.
பிரபஞ்சத்தின் ரகசியம் அறிய ஆவல்
பூமி உள்ளிட்ட கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவை பிரபஞ்சத்தில் எப்படி பிறந்தன என்பது குறித்து அறிந்து கொள்ள உலகில் உள்ள விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், அவர்கள் அறிந்து கொண்டது மிக சிறிதளவே. எனவே, மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, அணுவை மோத விட்டு பிரபஞ்சம் தோன்றிய ரகசியத்தை அறியும் மிகப்பெரிய முயற்சியில் அமெரிக்கா, ரஷ்யா, சுவிட்சர்லாந்து, ஜப்பான் நாட்டு விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இவர்களுக்கு உதவியாக இந்தியா, கனடா, சீனா உள்ளிட்ட விஞ்ஞானிகளும் பணியாற்றினர். இதற்காக, சுவிட்சர் லாந்தில் ஜெனீவா நகருக்கு வெளியே 45 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் "செர்ன்' என்ற இயற்பியல் சோதனைக்கூடம் அமைக்கப்பட்டது. அமெரிக்காவில் சிகாகோ நகருக்கு அருகேயும் இதே போன்று சிறியளவில் "டெவட்ரான்' என்ற இயற்பியல் சோதனை கூடம் அமைக்கப்பட்டது. சோதனைக்கூடத்தில் அணு உற்பத்தி செய்யும் இயந்திரம் மிகுந்த பாதுகாப்புடன் வைத்து, உற்பத்தி செய்யப்பட்ட அணுக்கள் பலமுறை சுற்றி அதிக திசைவேகத்துடன் ஒன்றின் மீது ஒன்று மோதும் படி செய்து, ஏற்படும் விளைவுகள் குறித்து அறிந்து கொள்வதால் பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்ற ரகசியம் வெளிவரும் என்று விஞ்ஞானிகள் கருதினர்.
சுவிஸ் - பிரான்ஸ் எல்லையில் பூமிக்கடியில் "ஜீரோ' டிகிரி வெப்பநிலையில் சுரங்க அமைப்பில் கட்டப்பட்ட பரிசோதனை கூடத்தில் முதல் வெடிப்பு நடத்தப் பட்டது. 27 கி.மீ., தூரத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு முனைகளிலிருந்து மின்காந்த விசையின் மூலம் சுழற்றி அனுப்பப்பட்ட புரோட்டான்கள் மிக வேகமாக வந்து மோதின. அப்போது மனிதனால் உருவாக்கப்பட்ட மிகச்சிறிய அணுவிலிருந்து 7 டிரில்லியன் "எலக்ட்ரான் ஓல்ட்' ஆற்றல் ஏற்பட்டது. "செரன்' அமைப்பின் தலைவர் ரால்ப்ஹியூர் கூறுகையில், "பிரபஞ்சம் எப்படி உண்டானது என்பது குறித்து கண்டறிவதில் விஞ்ஞானிகள் சிறிதளவு முன்னேற்றம் அடைந்துள்ளனர். இது பாராட்ட வேண்டிய, மகிழ்ச்சியான செய்தி.
இங்கு அமைக்கப் பட்டுள்ள இயந்திரம் விண்வெளி ஆய்வில் புதிய சகாப்தத்தை தோற்றுவித்துள்ளது. மேலும், இரண்டு வித்தியாசமான அணுக்கள் மோதும் போது தோன்றும் அதிக சக்தியை அறிந்து கொள்ள, தற்போது உள்ளதை விட நவீன இயற்பியல் சோதனைக்கூடம் தேவை. சமீபத்தில் நடந்த சோதனைகள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து "செரன்' தலைவர் ரால்ப்ஹியூர் வெளியிட்ட முடிவுகளை பாரிஸ் நகரில் நடந்த "இயற்பியல் உயர் சக்தி' என்ற சர்வதேச மாநாட்டில் குழுமியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இயற்பியல் விஞ்ஞானிகள் அறிந்து கொண்டனர்.
தற்போதுள்ள சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் மூலம் செய்த சோதனையில் பிரபஞ்சம் எப்படி உண்டானது என்பது குறித்து ஒரளவிற்கு தெரிந்தது கொள்ள முடிகிறது. ஆயிரத்து 400 கோடி ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பெரு வெடிப்பு காரணமாக பிரபஞ்சம் பிறந்தது என்பதை கொள்கையளவில் விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர். அடுத்ததாக 57 ஆயிரத்து 825 கோடி ரூபாய் செலவில் 50 மைல் நீளத்திற்கு சர்வதேச இயற்பியல் கூடம் அமைத்து சோதனைகள் செய்ய திட்டமிடப் பட்டுள்ளது. இந்த சோதனை சர்வதேச ஒத்துழைப்புடன் செய்யப்படும். "செரன்' சோதனை கூடத்தின் நோக்கம் உயர் சக்தி குறித்த ஆய்வு. ஆனால், ஹம்பர்க்கில் துவக்கப்படவுள்ள சர்வதேச பரிசோதனை கூடம் அதிக தொழில்நுட்பம் கொண்டதாக இருக்கும்' என்றார்.
"கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பரில் அணுக்கள் மோதும் சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், சில பிரச்னைகள் ஏற்பட்டதால் அது நவம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. பின், வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. அது முதல் வெற்றி தான் தொடர்கிறது. முன்பு புரோட்டான்களுக்கிடையே மோதல் ஏற்பட வைத்து சோதனை செய்யப்பட்டது. ஆனால், சர்வதேச பரிசோதனை கூடத்தில் இனி நடைபெறவுள்ள சோதனையின் போது, எலக்ட்ரான் மற்றும் பாசிட்ரான் எதிரெதிரானவைகளை மோத விட்டு நடைபெறும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்யப்படும்' என்கிறார் அணு இயற்பியல் அறிஞரான கே வார்ம்செர்.
நன்றி:தினமலர்
இரண்டாவது முறையாக எண்ணெய் விலை கிடுகிடு
எண்ணெய் வித்துக்களின் தட்டுப்பாட்டால் விலையேற்றமடைந்த எண்ணெய் விலை, மின் கட்டண உயர்வு அமலான மறு நிமிடமே, இரண்டாவது முறையாக மேலும் உயர்ந்துள்ளது.
கர்நாடக மாநிலம் ஜல்லிக்கரை, ஆந்திராவின் கடப்பா, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, தமிழக எண்ணெய் ஆலைகளுக்கு நிலக்கடலை வந்து கொண்டிருந்தது. வரத்து தற்போது முற்றிலும் நின்று விட்டதோடு, நிலக்கடலையின் விலையிலும் கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது. இவ்விலை உயர்வு, அப்படியே எண்ணெயில் எதிரொலித்துள்ளது. தமிழகத்தில் கடந்த வாரம், நிலக்கடலை, சூரியகாந்தி ஆகிய எண்ணெய் வித்துக்களின் விலை உயர்வால், எண்ணெய் விலை லிட்டருக்கு இரண்டு முதல்மூன்று ரூபாய் வரை உயர்ந்தது. ஆகஸ்ட் 1ம் தேதி முதல், மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து எண்ணெய் விலை,நேற்று முதல் லிட்டருக்கு இரண்டு ரூபாய் மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. ஜூலை கடைசி வாரம், லிட்டர் 76 ரூபாய்க்கு விற்பனையான கடலை எண்ணெய், ஐந்து ரூபாய் அதிகரித்து 81 ரூபாயானது. நேற்று இதன் விலையில் மேலும்இரண்டு ரூபாய் அதிகரித்து, லிட்டர் 83 ரூபாய்க்கு விற்கிறது. 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட டின் 1,215 ரூபாய்க்கு விற்றது, 1,245 ரூபாய்க்கு விற்கிறது. ரீபைன்ட் கடலை எண்ணெய், கடந்த வாரம் நான்கு ரூபாய் அதிகரித்து 89 ரூபாய் விற்றது; நேற்று மேலும் இரண்டு ரூபாய் அதிகரித்து, 91 ரூபாய்க்கு விற்கிறது.
கடலை எண்ணெய் விலையில் ஏற்பட்ட உயர்வை அடுத்து, சூரிய காந்தி எண்ணெயின் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த வாரம், லிட்டர் 55 ரூபாய்க்கு விற்ற சூரியகாந்தி எண்ணெய், ஆறு ரூபாய் நேற்று உயர்ந்து, 61 ரூபாய்க்கு விற்கிறது. இதே போல் 15 லிட்டர் கொண்ட டின், 825 ரூபாய்க்கு விற்றது, 915 ரூபாய்க்கு விற்கிறது. கடந்த வாரம் வரை 43 ரூபாய்க்கு விற்ற பாமாயில், நேற்று 45 ரூபாயானது. ஆனால், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
எண்ணெய் வியாபாரி கிருஷ்ணன் கூறியதாவது: தமிழகத்தில் எண்ணெய் வித்துக்களுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக, கடந்த வாரம் கடலை எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் விலை உயர்ந்தது. இந்நிலையில், ஆகஸ்ட் 1ம் தேதி முதல், மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்த அடுத்த நிமிடமே எண்ணெய் ஆலைகள், தங்களின் தயாரிப்புகளுக்கான விலையை ஏற்றின. கடலை எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய், பாமாயில் ஆகியவற்றின் விலை, இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. பண்டிகை சீசன் துவங்க உள்ள நிலையில், எண்ணெய்களின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது. இவ்வாறு கிருஷ்ணன் கூறினார்.
பசப்பும் "பிளாக்பெர்ரி"
''பிளாக்பெர்ரி மொபைல்போன்களில் பரிமாறப்படும் தகவல்களை இந்திய அரசு கண்காணிக்கும் வகையில், சர்வரை மாற்றி அமைக்குமாறு கேட்டிருந்த அந்நாட்டு கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை,'' என, 'ரிம்' நிறுவனம் கூறி விட்டது. இந்த பசப்பு பதிலால், இந்திய அரசு கடும் அதிருப்தியடைந்துள்ளது.
இந்தியாவின் பாதுகாப்புக்கு அவ்வப்போது அச்சுறுத்தல் எழுவதால், மொபைல் போன்கள் மூலம் பரிமாறப்படும் தகவல்கள் அனைத்தையும், இந்திய அரசு கண்காணித்து வருகிறது. கனடா நாட்டிலுள்ள, 'ரிம்' நிறுவனத்தின் தயாரிப்பான 'பிளாக்பெர்ரி' மொபைல்போனை, லட்சக்கணக்கான இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர். 'பிளாக்பெர்ரி' மொபைல் மூலம் பரிமாறப்படும் தகவல்களை இடைமறித்து கேட்கும் வசதி இந்தியாவிடம் இல்லை. இந்த போனுக்கான சர்வர் கனடாவில் உள்ளதால், இதன் பிரத்யேக குறியீடுகளை கண்காணிக்க, அந்த சர்வரில் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் அல்லது இந்தியாவில் ஒரு சர்வர் நிர்மாணிக்க வேண்டுமென, மத்திய உள்துறை அமைச்சகம், 'ரிம்' நிறுவனத்திடம் கேட்டிருந்தது. முதலில் தயங்கிய இந்நிறுவனம், 'அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் தனியாக சர்வர் அமைத்துள்ளீர்கள். எங்களுக்கு கண்காணிப்பு வசதி ஏற்படுத்தி தரவில்லையெனில், இந்தியாவில் 'பிளாக்பெர்ரி' மொபைல் போன்களில் செயல்பாடுகளை முடக்கி விடுவோம்' என, இந்தியா எச்சரித்ததை அடுத்து, வசதி ஏற்படுத்தி தருவதாக உறுதி கூறியது. ஆனால் நேற்று, தன் நிலையிலிருந்து 'ரிம்' நிறுவனம் பின் வாங்கி விட்டது.
அந்நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் கோரிக்கையை எங்களால் நிறைவேற்ற இயலவில்லை. 'பிளாக்பெர்ரி' மொபைல் போன்களில் பரிமாறப்படும் தகவல்களை, கண்காணிப்பு ஏஜன்சிகள் மட்டுமல்ல; எங்களால் கூட படிக்க முடியாது. வாடிக்கையாளர்களின் வசதிக்காகவே இது போன்ற பாதுகாப்பு வடிவமைப்பை, மொபைல்போன்களில் ஏற்படுத்தியுள்ளோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 'ரிம்'மின் இந்த அறிக்கையால், இந்திய அரசு கடும் அதிருப்தியடைந்துள்ளது. ஏனெனில் இந்தியாவில், 10 லட்சம் 'பிளாக்பெர்ரி' மொபைல் உள்ளதென்பதால், அரசுக்கு கூடுதல் பிரச்னை எழுந்திருக்கிறது.
கெரசின் லிட்டருக்கு ரூ.11.50
தமிழகத்தில் ரேஷனில் வழங்கப்படும் கெரசின் விலை அதிரடியாக லிட்டருக்கு, மூன்று ரூபாய்க்கும் மேல் உயர்ந்துள்ளது. லிட்டர் 11.50 ரூபாயாக உயர்ந்துள்ளது. விலை உயர்வு, ஆகஸ்டு 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் கெரசின் வழங்கப்படுகிறது. சிலிண்டர் அல்லாத குடும்ப அட்டைகளுக்கு 10 லிட்டரும், ஒரு சிலிண்டர் அட்டைகளுக்கு மூன்று லிட்டரும், விடுபட்டு, புதிதாக வழங்கப்பட்ட அட்டைகளுக்கு மூன்று லிட்டர் என கெரசின் வழங்கப்படுகிறது. கடந்த மாதம் வரை சென்னையில் ஒரு லிட்டர் 8.40 ரூபாயாகவும், பிற மாவட்டங்களில் தூரத்தின் தன்மைக்கேற்ப ஒன்பது ரூபாய் வரையும் விற்பனையானது. தற்போது கெரசின் விலை திடீரென லிட்டருக்கு மூன்று ரூபாய்க்கும் மேல் அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் 11.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வு ஆக., 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.
உணவு வழங்கல் துறை அதிகாரிகள் கூறும்போது, 'மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தியதால், கெரசின் விலையும் உயர்ந்துள்ளது. சென்னையில் லிட்டர் 11.50 ரூபாயாகவும், பிற மாவட்டங்களில் தூரத்தின் தன்மைக்கேற்ப 12 ரூபாய் வரையும் விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது' என்றனர்.
Subscribe to:
Comments (Atom)