பி.எஸ்.எல்.வி., சி-15 ராக்கெட், ஐந்து செயற்கைக்கோள்களுடன், திட்டமிட்டபடி 12-07-2010 விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்து சாதனை படைத்துள்ளது. இதுவரை செலுத்தப்பட்டுள்ள 16 பி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்களும் தொடர் வெற்றியைப் பெற்றுள்ளன. இவ்வாண்டு இறுதிக்குள் தொலைத்தொடர்பு மற்றும் வேளாண் செயற்கைக்கோள்கள் ஏவப்பட உள்ளதாக, இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இந்தியாவின், "கார்ட்டோசாட்-2 பி' தொலை உணர்வு செயற்கைக்கோள், இந்திய பொறியியல் மாணவர்கள் தயாரித்த ஸ்டட்சாட், அல்சாட் - 2ஏ, அய்சாட் - 1 மற்றும் டிசாட்- 1 ஆகிய துணை செயற்கைக்கோள்களுடன், பி.எஸ்.எல்.வி., சி-15 ராக்கெட், 56 மணி நேர, "கவுன்ட் டவுனு'க்குப் பின், நேற்று காலை சரியாக 9.22 மணிக்கு விண்ணில் சீறிப் பாய்ந்தது.ஏவப்பட்ட 20வது நிமிடத்தில், 9.42 மணிக்கு ஐந்து செயற்கைக் கோள்களையும், பூமியிலிருந்து 637 கி.மீ., தொலைவில், அவற்றுக்கான வட்டப்பாதையில் பி.எஸ்.எல்.வி., ராக்கெட் நிலை நிறுத்தியது. திட்டமிட்டபடி ராக்கெட் விண்ணில் பாய்ந்ததும், விஞ்ஞானிகள் கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:பி.எஸ்.எல்.வி., சி-15 ராக்கெட் எதிர்பார்த்தபடி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. ராக்கெட் ஏவுவதற்கு, இரண்டு வாரங்களாக சந்தித்த தொழில்நுட்ப இடர்ப்பாடுகள் சரி செய்யப்பட்டு, ஏவப்பட்டுள்ளது. இதற்காக உழைத்த அனைத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துக்கள்.வரும் செப்., இறுதியில் ஜிசாட் - 5 என்ற தொலைநோக்கு செயற்கைக் கோள், ஜி.எஸ்.எல்.வி.,-எப் 06 ராக்கெட்டுடன் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. வேளாண் திட்டங்களுக்கான ரிசோசாட் - 2 செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி.,-பி 16 ராக்கெட்டுடன் அக்., இரண்டாம் வாரத்தில் விண்ணில் ஏவப்பட உள்ளது.விண்வெளிக்கு மனிதனை அனுப்புவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. விண்வெளி சூழலுக்கு ஏற்ப மனித உடலை தயார்படுத்துதல், ராக்கெட் ஏவுவதற்கான தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கும் இன்னும் மூன்று ஆண்டுகள் தேவைப்படுகின்றன.
விண்வெளிக்கு 2013ல் ஆளில்லா விண்கலத்தையும், 2017ல் மனிதனையும் அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.சந்திரயான் - 1 நிலவிலிருந்து எடுத்து அனுப்பிய போட்டோக்களை ஆராய்ந்து வருகிறோம். புகைப்படங்களில் காணப்படும் நிலவின் நிழல் பகுதிகளில் நீர் மற்றும் கனிம வளங்கள் உள்ளனவா என்பதைப் பற்றி ஆராய, வரும் 2013ல் சந்திரயான் - 2 அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.கடந்த ஏப்., 15ல் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டின் கிரையோஜெனிக் இன்ஜின் பழுதானதற்கான காரணத்தை ஆராய்ந்து வருகிறோம். ஓராண்டுக்குள் கிரையோஜெனிக் இன்ஜின் இந்திய தொழில் நுட்பத்தில் வெற்றிகரமாக தயாரிக்கப்படும். நான்கு டன் வரை எடையுள்ள செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் அடுத்த தலைமுறைக்கான, "ஜி.எஸ்.எல்.வி.,-எம்கே 3' ராக்கெட் தயாரிப்பதற்கான சோதனை முயற்சிகள் நடந்து வருகின்றன.இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.
பி.எஸ்.எல்.வி., சி-15, கார்டோசாட் - 2 பி திட்ட இயக்குனர் உன்னிகிருஷ்ணன் கூறியதாவது: பி.எஸ்.எல்.வி., சி-15 ராக்கெட், 80 கோடி ரூபாயில் வடிவமைக்கப்பட்டது. நான்கு நிலைகளாக பிரிக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்டது. ஒன்று, மூன்றாம் நிலை திட எரிபொருளாலும், இரண்டு, நான்கு நிலைகள் திரவ எரிபொருளாலும் இயக்கப்பட்டது. ராக்கெட் 295 டன் எடையும், 44.4 மீட்டர் நீளமும் கொண்டது."கார்டோசாட் - 2 பி' செயற்கைக்கோள், 175 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டது. 0.8 மீட்டர் பகுத்தறியும் திறன் கொண்ட, அதிநுட்ப கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பூமியில் ஓடும் காரைக் கூட, துல்லியமாக படம் பிடிக்கலாம்.
செயற்கைக்கோள்கள் நகர்புற, கிராமப்புற கட்டமைப்பு வசதிகள், வட்டச் சாலைகள் அமைத்தல், நெடுஞ்சாலை மேம்பாடு, வனப்பகுதிகள் மற்றும் சதுப்பு நில காடுகளைக் கண்டறிதல், எரிவாயு குழாய் இணைப்பு, புதிய கால்வாய்கள் அமைப்பதற்காக உகந்த இடங்களைக் கண்டறிதல், காடுகளில் உள்ள மரங்களின் எண்ணிக்கையை கணக்கிடுதல் உள்ளிட்ட, நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு பெரிதும் பயன்படும்.மதுரை, ஐதராபாத், வாரணாசி, திருப்பதி மற்றும் நாக்பூர் ஆகிய நகரங்களின் படங்களை, கார்டோசாட் - 2 பி இன்று காலை 9.40 மணிக்கு, விண்வெளி கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்ப உள்ளது.
கார்டோசாட் - 2 பி, ஐசாட் - 1 மற்றும் ஸ்டட்சாட் ஆகிய மூன்று செயற்கைக்கோள்களும் அதற்கான வட்டப்பாதையை அடைந்தது, நேற்று காலை 11.30 மணிக்கு உறுதி செய்யப்பட்டது. ஸ்டட்சாட் 11.30 மணி அளவில் பூமியை ஒரு முறை, அதன் சுற்றுப்பாதையில் சுற்றி வந்தது. கார்டோசாட் - 2 பி ஒரு நாளைக்கு 14 முறை பூமியைச் சுற்றி வரும்; இதற்கான ஆய்வுக்காலம் ஐந்து ஆண்டுகள். ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ராக்கெட் ஏவுதளம் 1,000 கோடி ரூபாய் செலவில் அமைக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு உன்னிகிருஷ்ணன் கூறினார்.பேட்டியின் போது ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மைய இயக்குனர் தத்தன், விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குனர் வீரராகவன், தொலை உணர்வு மற்றும் சிறு செயற்கைக்கோள்களுக்கான திட்ட இயக்குனர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளும் உடனிருந்தனர்.
பி.எஸ்.எல்.வி., சி-15 ராக்கெட் நேற்று காலை 9.42 மணிக்கு அதன் இலக்கை அடையும் வரை, இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பரபரப்பு நிலவியது. ராக்கெட் அதன் இலக்கை அடைந்தவுடன், விஞ்ஞானிகள் ஒருவருக்கு ஒருவர் கைகுலுக்கியும், கட்டித் தழுவியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.இந்திய விண்வெளி ஆய்வில் ஒரு முக்கிய நிகழ்வான இந்த முயற்சியை, திட்டக்கமிஷன் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா தனது மனைவியுடன் நேரில் வந்து, விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். அவருடன் இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் எம்.ஜி.கே.மேனனும் வாழ்த்தினர்.
பெங்களூரில் உள்ள நித்தி மீனாட்சி தொழில்நுட்ப மையம் மற்றும் ஆந்திர, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த ஆறு பொறியியல் கல்லூரி மாணவர்கள் 30 பேரும் இணைந்து, ஸ்டட்சாட் செயற்கைக்கோளை தயாரித்துள்ளனர். 55 லட்சம் ரூபாய் செலவில் இந்த செயற்கைக்கோளை தயாரித்துள்ளனர்.இந்த செயற்கைக்கோள், பருவ நிலை மாற்றம் மற்றும் வன வளங்கள் குறித்த தகவல்களைத் தயாரித்து அனுப்பும். இது, இரண்டு ஆண்டுகள் விண்ணில் ஆய்வுகளை நடத்தும். "இளைஞர்களான எங்களாலும் நாட்டுக்கு உதவ முடியும்' என பொறியியல் மாணவர்கள், செயற்கைக்கோளை தயாரித்து சாதித்துக் காட்டியுள்ளனர்.
பி.எஸ்.எல்.வி., சி-15, பி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட் வரிசையில் 17வது ஆகும். கடந்த 1993 முதல் இதுவரை, பி.எஸ்.எல்.வி., - டி 1, பி.எஸ்.எல்.வி., சி-3 உள்ளிட்ட 17 ராக்கெட்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன. இவற்றில், 1993ம் ஆண்டு, செப்டம்பர் 20ம் தேதி, ஐ.ஆர்.எஸ்., - 1 ஈ செயற்கைக்கோளுடன் விண்ணில் செலுத்தப்பட்ட பி.எஸ்.எல்.வி., - டி 1 ராக்கெட் தோல்வியடைந்தது.அதன் பின், நேற்று வரை செலுத்தப்பட்டுள்ள 16 பி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்களும் தொடர் வெற்றியைப் பெற்றுள்ளன. இவற்றில் கடந்த 2008ம் ஆண்டு, அக்டோபர் 22ம் தேதி, சந்திரயான் - 1 செயற்கைக்கோளுடன் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி., சி-11 ராக்கெட் குறிப்பிடத்தக்கது.
பி.எஸ்.எல்.வி., ராக்கெட், விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்காக, இந்திய விஞ்ஞானிகளை முதல்வர் கருணாநிதி பாராட்டியுள்ளார்.பி.எஸ்.எல்.வி., ராக்கெட் நேற்று வெற்றிகரமாக ஏவப்பட்ட செய்தி கிடைத்ததும், இந்திய விண்வெளித் துறை விஞ்ஞானிகளுக்கு முதல்வர் கருணாநிதி பாராட்டு தெரிவித்துள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:நமது நாட்டு விஞ்ஞானிகளின் கடுமையான உழைப்பின் பயனாக விண்வெளி ஆராய்ச்சித் துறையில் இந்தியா உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக திகழ்ந்து, படிப்படியாக முன்னேறி வருகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பறக்கவிடப்பட்ட பி.எஸ்.எல்.வி., சி- 15 ராக்கெட் ஐந்து செயற்கைக்கோள்களைச் சுமந்து கொண்டு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து சென்று, நமது நாட்டு விஞ்ஞானிகளின் மகத்தான ஆற்றலை உலகுக்கு பறைசாற்றியுள்ளது.இந்த மகத்தான சாதனையை நிகழ்த்தியுள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறை விஞ்ஞானிகள் அனைவருக்கும் தமிழக மக்களின் சார்பிலும், என் சார்பிலும் மனமார்ந்த பாராட்டுக்கள்.இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment