Wednesday, July 28, 2010

பெட்ரோல் விலை உயர்வு ஏன்?

'பெட்ரோல் மற்றும் டீசல் விலை, மிகச் சிறிய அளவில் தான் உயர்த்தப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் நிதி நிலைமையை மேம்படுத்த அத்தகைய நடவடிக்கை தேவைப்படுகிறது' என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா விளக்கம் அளித்தார்.

நேற்று லோக்சபாவில், முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ் ஆகியோரும், அவர்களது கட்சி உறுப்பினர்களும் பெட்ரோல் விலை உயர்வு குறித்து கோஷம் எழுப்பினர். அவர்களுக்கு விளக்கம் அளித்த மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா கூறியதாவது:பெட்ரோல் மற்றும் டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் மீதான விலை உயர்வு என்பது மிகச் சிறிய அளவு தான். எண்ணெய் நிறுவனங்களின் நிதி நிலைமையை மேம்படுத்த இதுபோன்ற நடவடிக்கைகள் எடுப்பது அவசியமாகிறது.சில மாநிலங்கள் பெட்ரோல் மீதான விற்பனை வரியை அதிகபட்சமாக 33 சதவீதமாகவும், டீசல் மீது 24.7 சதவீதமாகவும், மண்ணெண்ணெய் மீது 12.5 சதவீதமாகவும் நிர்ணயித்துள்ளன. இவ்வாறு அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார்.



140 அமெரிக்கா வங்கிகள் திவால்

நடப்பாண்டின் ஜுலை மாதத்தில் 23-ந் தேதி வரை, அமெரிக்காவில் மொத்தம் 17 வங்கிகள் திவால் ஆகி உள்ளன. சென்ற ஏழு மாதங்களில் அந்நாட்டில் திவால் ஆன வங்கிகளின் எண்ணிக்கை 103-ஆக உயர்ந்துள்ளது. ஆக, மாதத்திற்கு சராசரியாக 15 வங்கிகள் திவால் ஆகி உள்ளன. சென்ற 2009-ஆம் ஆண்டில், அமெரிக்காவில் மொத்தம் 140 வங்கிகள் திவால் ஆகின. நடப்பு ஆண்டில், திவால் ஆகும் வங்கிகள் எண்ணிக்கை இதை விட அதிகமாகும் நிலை உருவாகி உள்ளது. அமெரிக்காவில் வேலை இழப்பு அதிகரித்து வருவதால், வங்கிகளிலிருந்து கடன் வாங்கியவர்களால், கடனை திரும்ப செலுத்த முடியவில்லை. இதனால், அந்நாட்டில் வங்கிகள் திவால் ஆவது தொடர்கதையாகி வருகிறது. பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்ள அந்நாடு வழங்கிய சலுகைகளால், நடப்பு 2010-ஆம் ஆண்டில், அந்நாட்டின் நிதி பற்றாக்குறை 1.47 லட்சம் கோடி டாலராக மிகவும் உயர்ந்து விடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் காட்டிலும் அதிகமாகும். அமெரிக்காவின் நிதி பற்றாக்குறை, அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது 10 சதவீதம் என்ற அளவில் உள்ளது. நம் நாட்டின் நிதி பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.5 சதவீதமாக உள்ளது.



வங்கிகளுக்கான வட்டி விகிதம் உயர்வு

வங்கிகளுக்கான குறைந்த கால கடன் மீதான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் ரிசர்வ் வங்கி, மற்ற வணிக வங்கிகளுக்கான குறைந்த கால கடன் மீதான வட்டி விகிதத்தை உயர்த்தி, புதிய வட்டி விகித கொள்கையை அறிவித்துள்ளது. இதன்படி, வணிக வங்கிகளுக்கு அளிக்கும் குறைந்த கால கடன் மீதான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்),0.25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.இனிமேல், புதிய ரெப்போ ரேட், 5.75 சதவீதமாக இருக்கும். இதேபோல், கடன் பெறுவதற்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெப்போரேட்), 0.50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான புதிய வட்டி வீதம் இனிமேல் 4.5 சதவீதமாக இருக்கும்.வங்கிகள், ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்பு விகிதத்தில் (சி.ஆர்.ஆர்.,)எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அது, 6 சதவீத மாகவே தொடர்ந்து நீடிக்கும்.மேலும், 2010-11ம் நிதியாண்டின் இறுதியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.5 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.ரிசர்வ் வங்கி ஏற்கனவே வெளியிட்டிருந்த அறிவிப்பில், இந்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி, 8சதவீதமாக இருக்கும் என,மதிப்பிடப்பட்டிருந்தது.புதிய வட்டி வீத கொள்கையை அறிவித்து, ரிசர்வ்வங்கி கவர்னர் சுப்பாராவ் பேசுகையில், 'கடந்த ஏப்ரலில் இருந்தே, நாட்டின்பொருளாதார நிலை மேம்பட்டு வருகிறது' என்றார்.இது குறித்த மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், 'பணவீக்கத்தை கட்டுப்படுத்து வதற்காகவே வட்டி வீதம் உயர்த்தப் பட்டுள்ளது.பொருளாதார வளர்ச்சிக்கு இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது' என்றார்.

Tuesday, July 27, 2010

ரிசர்வ் வங்கியின் ரெப்போ ரேட் அதிகரிப்பு

ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் அதிகரிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி வட்டி விகித கொள்கையை இன்று வெளியிட்டது. அதில் ரெப்போ ரேட் விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தியுள்ளது. ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 0.50 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 4.50 சதவீதமாக இருக்கிறது. வங்கிகளுக்கான ரொக்க கையிருப்பு விகிதம் ( சி.ஆர்.ஆர்., ) அதே 6 சதவீதத்திலேயே இருக்கிறது. மேலும் 2010 - 2011 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.5 சதவீதமாக அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

சூரிய சக்தி மூலம் 1,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி

அடுத்த மூன்று ஆண்டுகளில், நம் நாட்டில் சூரிய சக்தி மூலம் 1,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என மத்திய மின்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்தார். இதில் 500 மெகா வாட் சூரிய வெப்பத்தின் வாயிலாகவும், மற்றொரு 500 மெகா வாட் சூரிய ஒளி வாயிலாகவும் பெறப்படும் என அவர் கூறினார். மத்திய அரசுக்கு சொந்தமான பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் மின் உற்பத்தி திட்டங்களுக்கு தேவையான நிதி உதவி வழங்கி வருகின்றன. ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் கிராமப்புறங்களில் அமைக்கப்படும் மின் உற்பத்தி திட்டங்களுக்கு கடன் வசதி அளித்து வருகிறது. இந்த இரண்டு நிறுவனங்களின் ஆதரவுடன் 2013-ஆம் ஆண்டுக்குள் 1,000 மெகா வாட் சூரிய மின் சக்தி உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

பருப்பு விலை ச‌ரிவு

உணவுப் பொருட்களை, 'ஸ்டாக்' வைத்துள்ள வியாபாரிகள் மீது, அரசு அதிரடி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பரவிய தகவலால், பருப்பு விலை சரிந்துள்ளது. பருப்பு விலையை கட்டுப்படுத்தும் விதமாக, ஆன்-லைன் வர்த்தகத்தில் இருந்து, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை மத்திய அரசு, நீக்கியது. இருந்தும், வடமாநிலங்களில் வெள்ளம் காரணமாக, விளைச்சலில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.



நவம்பர் 2009லிருந்து கடந்த வாரம் வரை, அனைத்து பருப்பு வகையிலும் நிலையில்லா தன்மையே நீடித்தது. இதனால், பெரிய வியாபாரிகளை தவிர, நடுத்தர மற்றும் சிறிய மளிகை கடை வியாபாரிகள், விற்பனைக்கு ஏற்ப பருப்பு வகைகளை கொள்முதல் செய்தனர். எதிர்க்கட்சிகளின் போராட்டம் மற்றும் தமிழகத்தில் வர இருக்கும் சட்டசபைத் தேர்தலை கருத்தில் கொண்டு, மத்திய, மாநில அரசுகள், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக, வடமாநிலம், தமிழகத்தில் அனைத்து வகையான பருப்புகளையும் இருப்பு வைத்துள்ள வியாபாரிகளை கண்காணிக்க உளவுத் துறைக்கு, மத்திய, மாநில அரசுகள், ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளன. இத்தகவல் வியாபாரிகள் மத்தியில் பரவி, இருப்பு வைத்துள்ள பருப்பு வகைகளை விற்பனைக்கு அனுப்ப துவங்கி விட்டனர். வடமாநிலங்களில் இருந்தும் தமிழகத்துக்கு பருப்பு வரத்து, திடீர் என அதிகரித்துள்ளதால், விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.



கடந்த வாரம், துவரம் பருப்பு மொத்த விலையில் குவிண்டால் 7,600 ரூபாய்க்கு விற்றது, நேற்று 6,950 ரூபாய்க்கும், 9,800 ரூபாய்க்கு விற்ற பாசி பருப்பு, 8,400 ரூபாய்க்கும் விற்கிறது. மேலும் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். துவரம் பருப்பு, பாசி பருப்பின் விலை சரிவடைந்த நிலையில், உளுந்தம் பருப்பின் விலையில் மாற்றமில்லை. இச்சரிவு மேலும் தொடரும் என்பதால், வியாபாரிகள் மத்தியில் கடும் கிலியை ஏற்படுத்தியுள்ளது.

Wednesday, July 21, 2010

உலகின் முதல் பெராரி தீம் பார்க்


உலகின் முதல் பெராரி தீம் பார்க் துபாயில் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து துபாய் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : துபாய் நாட்டில் முதல்முறையாக பார்முலா ஒன் கார் போட்டிகள் நடை‌பெற்றன. அப்போது. அந்த போட்டிகளுக்கு, உலக மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்ததாகவும், அதனை கவுரவப்படுத்தும் பொருட்டு, பெராரி உலகம் துபாயில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பெராரி உலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பெராரி தீம் பார்க், சுற்றுலா பயணிகள் அதிகம் பார்வையிடும் சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது. இந்த தீம் பார்க 100 நாட்கள் திறந்திருக்கும் என்றும், இந்த தீம் பார்க்கில், உலகின் அதிவேக ரோலர் கோஸடர் நிறுவப்பட்டு உள்ளதாகவும், பெராரி பார்முலா ஒன் காரில் பயணம் செய்த உணர்வு, இந்த ரோலர் கோஸ்டரில் பயணிக்கும்போது ஏற்படும் என்றும் துபாயின் முக்கிய சுற்றுலாத் தலமான யாஸ் மரினா சர்க்யூட்டில், கடந்த நவம்பர் 2009 காலம் வரை பார்வையிட்ட மக்களின் எண்ணிக்கையை, இந்த தீம்பார்க் பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை மிஞ்சி விட்டதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.